பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
பழநி : கோடை விடுமுறையால், பழநிக்கு, பக்தர்களின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், பழநியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நகருக்குள் இருக்கும் வையாபுரிகுளம், இடும்பன் குளங்களில் தண்ணீர் இல்லை. நாள்தோறும் குடிநீர் வழங்க முடியாமல் நகராட்சி திணறி வருகிறது. மேலும் தனியார் குளிக்குமிடங்களில் நபர் ஒன்றுக்கு ரூ.20 வரை வசூலிக்கின்றனர். பழநி கோயில் வாகனங்கள் நிறுத்திடத்தில் மேற்கூரை வசதியில்லாததால், கிரிவீதியை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதிகளில் நெரிசல் ஏற்படுகிறது. பழநி அடிவாரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் வழி, கிரிவலம் வரும் பாதை ஆகிய இடங்களில் ஏராளமான தனியார் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக முகூர்த்தநாட்கள், சனி, ஞாயிறு போன்ற பொது விடுமுறை தினங்களில், பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர், கழிப்பறைகள் போதிய அளவில் இல்லாததால், பழநிக்கு குடும்பத்துடன் வரும் பக்தர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் கட்டண கழிப்பிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.