பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
தேனி: கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா, நாளை நடப்பதை தொடர்ந்து, நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார், தமிழக - கேரள எல்லையில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை, 142 அடியாக உயர்த்தலாம், என சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்களிடம் அதிருப்தியையும், தேனி மாவட்ட மக்களிடம் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா நாளை நடக்கிறது. இவ்விழாவிற்கு, தமிழக பக்தர்கள், கேரள வனப்பகுதி வழியாக தான் செல்ல வேண்டும். இந்நிலையில், விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று இடுக்கி, தேனி எஸ்.பி.,க்களும், கலெக்டர்களும் சந்தித்து பேச முடிவு செய்து இருந்தனர். ஆனால், கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில், பெரியாறு அணை நீர் மட்டம் உயர்த்தும் பிரச்னை தொடர்பாக, திடீரென அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இடுக்கி கலெக்டர், எஸ்.பி.,யால் கண்ணகி கோயில் விழா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில், இரு மாநிலங்கள் சார்பில், வழக்கத்தை விட 2 தரப்பிலும், 3 மடங்கு கூடுதல் போலீசாரை பாதுகாப்பிற்கு நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக பக்தர்கள் செல்லும் வனப்பாதையில், 100 மீட்டர் தூரத்திற்கு ஒரு போலீசார் வீதம் நிறுத்தப்படுகின்றனர். கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நக்சலைட்டுகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, எந்த சதி வேலைகளிலும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக, எல்லைபகுதி முழுவதும் நக்சலைட் தடுப்பு போலீசார், கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.