பதிவு செய்த நாள்
14
மே
2014
01:05
திருத்தணி : காந்தி நகர், கங்கையம்மன் கோவிலில், நேற்று நடந்த ஜாத்திரை திருவிழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். திருத்தணி, காந்தி நகர், நல்லதண்ணீர் குளக்கரையில் அமைந்துள்ளது கங்கையம்மன் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஜாத்திரை திருவிழா வெகு விமாரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டின் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 8:30 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, காலை, 9:30 மணி முதல், மாலை, 4:00 மணி வரை திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும், அம்மன் பூ கரகம் பேண்டு வாத்தியத்துடன், நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தது.அப்போது பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், தீபாராதனை நடத்தியும் வழிபட்டனர். விழாவில், முருகப்ப நகர், காந்தி ரோடு, கலைஞர் நகர், கச்சேரி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதே போல், திருத்தணி அடுத்த, மாம்பாக்கம் கிராமத்தில் நடந்த ஜாத்திரை திருவிழாவில், களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.