பதிவு செய்த நாள்
24
மே
2014
11:05
திருமலையில், வைகாசி மாதம் வளர்பிறையில், தசமி திதி அன்று, அனுமன் ஜெயந்தி நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்று காலை, ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயர், வராக சுவாமி கோவில் அருகில் உள்ள குளக்கரை ஆஞ்சநேயர் கோவில்களில், தேவஸ்தானம் சார்பில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தாயாருக்கு தெப்போற்சவம்: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, ஜூன், 8 முதல், 12ம் தேதி வரை தெப்போற்சவம் நடக்கிறது. இதற்காக, திருக்குளம் அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பழைய நீர் அகற்றப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது.இந்த ஐந்து நாட்களும், கோவிலில் குங்கும அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் தரிசனம்: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தமிழக கவர்னர் ரோசய்யா, நேற்று முன்தினம் இரவு, திருமலைக்கு வந்தார்.இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு, ரங்க நாயக்கர் மண்டபத்தில், சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது. பின், திருச்சானூர் தாயாரை தரிசித்து, விமானத்தில் சென்னை திரும்பினார்.