பதிவு செய்த நாள்
29
மே
2014
03:05
ஒளிமயமான இறைவனை அடைவது பற்றி 8-ஆம் மந்திரம் கூறியது. அந்த ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதுபற்றி தொடரும் இரண்டு மந்திரங்கள் (15-16) கூறுகின்றன. இவை வேதங்களில் காணப்படுகின்ற அற்புதமான பிரார்த்தனைகளுக்கு உதாரணமாகும். இவை உயர்நிலை பிரார்த்தனைகள். ஒளிக்கு அப்பால் செல்வதற்கான இந்த முயற்சியே ஈச வித்யை. பிரார்த்திப்பவனின் தகுதி, பிரார்த்தனைக்கான விஷயம், பிரார்த்திக்கும் விதம் அனைத்தையும் தெளிவாக இந்த மந்திரங்களில் காண்கிறோம். 16-ஆம் மந்திரம் இந்தப் பிரார்த்தனையின் பலனைக் கூறுகிறது. அதாவது, ஒளிக்கு அப்பால் தாம் கண்டதை விவரிக்கிறார் உபநிஷத முனிவர்.
ஒளிக்கு அப்பால் உள்ளது என்ன?
ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம்
தத் த்வம் பூஷன்னபாவ்ருணு ஸத்யதர்மாய த்ருஷ்ட்டயே (15)
ஹிரண்மயேன-பொன்மயமான; பாத்ரேண- திரையால்; ஸத்யஸ்ய- உண்மையின்; முகம்-முகம்; அபிஹிதம்- மறைக்கப்பட்டுள்ளது; பூஷன்- சூரிய தேவா; ஸத்யாதர்மாய- சத்திய நிஷ்டை உடைய எனக்கு; த்ருஷ்ட்டயே- காண்பதற்காக; தத்- அதை; த்வம்- நீ; அபாவ்ருணு- விலக்குவாய்.
15. உண்மையின் முகம் பொன்மயமான திரையால்
மறைக்கப்பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை
உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக
மறைப்பை விலக்குவாய்!
இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக (1. தமஸோ மா ஜ்யோதிர் கமய
அப்யாரோஹ மந்திரம், பிருஹதாரண்யக உபநிஷதம், 1.3.28.)என்பதுபோன்ற பிரார்த்தனைகளை நாம் அறிவோம். இது இறைவனை நாடிச் செல்பவனின் ஆரம்ப பிரார்த்தனை. அவன் அறியாமை இருளில் இருக்கிறான். எனவே அந்த இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுமாறு அவன் இறைவனைப் பிரார்த்திக்கிறான். பிரார்த்தனை, ஜபம், தியானம் போன்ற பல்வேறு சாதனைகளின்மூலம் அந்த ஒளியைக் காண்கிறான். அந்த ஒளியின் மென்மையையும் வசீகரத்தையும் உணர்த்தவே பொன்மயமான திரை என்று இந்த மந்திரம் குறிப்பிடுகிறது. அந்த மென்மையிலும் வசீகரத்திலும் அவன் தன்னை இழந்து அங்கேயே நிற்கிறான்.
ஆனால் உண்மை என்பது இருள் - ஒளி, துன்பம்- இன்பம் போன்ற அனைத்து இருமைகளையும் கடந்தது. எனவே உண்மையை, உண்மைப்பொருளை, உள்ளது உள்ளபடி அறிய வேண்டுமானால் அவன் ஒளியையும் கடந்து சென்றாக வேண்டும். அந்த ஒளி எவ்வளவுதான் இன்பம் தருவதாக இருந்தாலும் அவன் அதைக் கடந்து சென்றேயாக வேண்டும். அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.
அறியாமை இருளில் உழல்கின்ற ஒருவன் ஜபம், தவம், வழிபாடு போன்ற சாதனைகளின்மூலம் ஒளிமயமான, தங்கமயமான இறைக் காட்சியைப் பெற முடியும். ஆனால் அதைக் கடந்து செல்வதற்கு நமது முயற்சிகள் எதனாலும் இயலாது. அங்கே இறையருள் ஒன்றே செயல்பட முடியும். எனவேதான் அவரை நோக்கி பிரார்த்திக்கிறான்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சாதனைக்கால நிகழ்ச்சி ஒன்று இதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. தோதாபுரி என்பவரின் துணையுடன் வேதாந்த சாதனைகளைச் செய்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவருக்குப் பல்வேறு உபதேசங்களை அளித்த தோதாபுரி, இறுதியாக, இருமைகள் அனைத்தையும் கடந்த நிலையில் உண்மைப்பொருள் அனுபவத்தைப் பெறுமாறு கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வளவு முயன்றும் அது முடியவில்லை. ஏனெனில் மனம் அகமுகமானதும் தேவியின் ஒளிமயமான காட்சி அவர்முன் எழுந்தது. அந்தப் பேரொளியைக் கடந்து அவரால் செல்ல முடியவில்லை. கடைசியில் நம்பிக்கையையே இழந்த நிலையில் அவர் தமது இயலாமையைத் தோதாபுரியிடம் தெரிவித்தார். அவ்வளவு வசீகரமான காட்சி அது. இறுதியில் தோதாபுரியின் அருளால் அவர் அந்த ஒளியைக் கடந்து சென்று, உண்மைப் பொருளுடன் ஐக்கியமாகின்ற நிலையை அடைந்தார்.
உயர்நிலை பிரார்த்தனையைச் செய்வதற்கான தகுதியையும் இந்த மந்திரத்தில் நாம் காண்கிறோம். சத்திய நிஷ்டை உடைய நான் என்று தனது தகுதியை இங்கே அந்த ரிஷி குறிப்பிடுகிறார். உண்மையில், உண்மைப்பொருளாகிய இறைவனில் நிலைநிற்கின்ற, இறைவனைச் சரணடைந்த வாழ்க்கை இங்கே குறிப்பிடப்படுகிறது. உலகப் பொருட்கள் எதையும் கருதாமல். கடவுள் ஒருவரையே நம்பி வாழ்கின்ற, அவரை ஒளிமயமாக ஏற்கனவே கண்ட ஒருவர் செய்கின்ற பிரார்த்தனை இது.
ஒளிக்கு அப்பால் இருப்பது நானே:
எங்கும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்துடன் கடமைகளைச் சிறப்பாகச் செய்வது சிறந்த வாழ்க்கைக்கான வழி (1,2), வாழ்க்கை எதுவாக இருந்தாலும் அக வாழ்க்கையை நாடுவதும் ஆன்மாவைத் தேடுவதும் மிக முக்கியமானவை (3), ஒளியின் காட்சி (8), உயர்நிலை சாதனை (9-14), ஒளிக்கு அப்பால் செல்ல பிரார்த்தனை (15) என்று படிப்படியாகக் கூறிவந்த உபநிஷதம் இங்கே அந்தப் பிரார்த்தனையின் பலனைக் கூறுகிறது.
பூஷன்னேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹரச்மீன் ஸமூஹ
தேஜோ யத் தே ரூபம் கல்யாணதமம் தத் தே பச்யாமி
யோஸஸாவஸெள புருஷ: ஸோஸஹமஸ்மி (16)
பூஷன்- பேணிக் காப்பவனே; ஏகர்ஷே- தனியாகப் பயணிப்பவனே; யம- ஆள்பவனே; ஸூர்ய- சூரிய தேவா; ப்ராஜாபத்ய- பிரஜாபதியின் மகனே; ரச்மீன்- கிரணங்களை; வ்யூஹ- விலக்கு; தேஜ:- ஒளியை; ஸமூஹ- சுருக்கிக்கொள்ள; யத்- எது; தே- உனது; கல்யாணதமம்- மிகவும் மகிமை வாய்ந்த; ரூபம் - வடிவமோ; தத்- அதை; தே- உனதருளால்; பச்யாமி- பார்க்கிறேன்; ய:- யார்; அஸெள- அந்த; புருஷ:- நபர்; ஸ:- அவர்; அஹம் அஸ்மி- நானே.
16. அனைத்து உயிர்களையும் பேணிக் காப்பவனே,
தனியாகப் பயணிப்பவனே, அனைத்தையும் ஆள்ப
வனே, சூரிய தேவா, பிரஜாபதியின் மகனே! உனது
கிரணங்களை விலக்கிக்கொள். உனது பேரொளியைச்
சுருக்கிக்கொள். மகிமை வாய்ந்த உனது வடிவத்தை
உனதருளால் நான் காண வேண்டும். அந்தச் சூரியனில்
இருப்பது நானே.
இறையருள் மட்டுமே வேண்டியது. அதற்காகவே ஒருவன் பிரார்த்திக்க வேண்டும். எல்லா உயிர்களும் முன்வினையின் படியே செயல்படுகின்றன, துன்புறுகின்றன. ஆனால் இறைவன் நினைத்தால், வினைப்பயனை அனுபவிக்க வேண்டிய காலத்தைக் குறைத்து ஒருவனுக்கு விரைவில் அனுபூதியை அளிக்க முடியும் என்பார் அன்னை ஸ்ரீசாரதாதேவி. ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதைக் காண்பதற்கு உபநிஷத முனிவரும் இறையருளை வேண்டிப் பிரார்த்திப்பதை இங்கே காண்கிறோம்.
ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?
ஒளிக்கு அப்பால் தம்மையே கண்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகு, ஆன்மீக சாதனைகளுக்குப் பிறகு, இறைக் காட்சிக்குப் பிறகு அறுதி நிலை அனுபூதியாக இந்த முனிவர் தம்மையே காண்கிறார். இதன் பொருள் என்ன?
சூரியனில் இருப்பது நானே என்று உபநிஷதம் கூறுவதில் நான் என்பதை நாம் சாதாரணமாகப் புரிந்து கொள்கின்ற நான் என்ற பொருளில் புரிந்துகொள்ளக் கூடாது. பொதுவாக உடல்- மனச் சேர்க்கையையே நான் என்று கூறுகிறோம். இந்த நான் ஒளிக்கு அப்பால் இருக்க முடியாது. எனவே முனிவர் கூறுகின்ற நான் உயர்நிலை நான் ஆகும். சாந்தோக்ய உபநிஷதக் கதை ஒன்றின்மூலம் இதனை சுவாமி விவேகானந்தர் விளக்குகிறார்:
ஒரு தேவனும் ஓர் அசுரனும் ஆன்மாவைப்பற்றி அறிவதற்காக முனிவர் ஒருவரிடம் சென்றனர். பல வருடங்கள் கல்வி கற்றனர். இறுதியில் ஒரு நாள் அந்த முனிவர் அவர்களிடம், நீங்கள் தேடும் பொருள் நீங்களே என்று கூறினார். இருவரும் தங்கள் உடம்பே ஆன்மா என்று நினைத்துக்கொண்டனர். மிகுந்த திருப்தியுடன் திரும்பிச் சென்று தங்கள் சுற்றத்தாரிடம், கற்க வேண்டி அனைத்தையும் நாங்கள் கற்றுவிட்டோம். இனி உண்போம், குடித்துக் களிப்போம். நாம்தான் ஆன்மா. நமக்குமேல் எதுவும் கிடையாது என்றனர். அசுரனின் இயல்பே அறிவீனமும் மூடத்தனமும்தானே. அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. தானே கடவுள், ஆன்மா என்பது உடலே என்ற கருத்தில் பூரண திருப்தி அடைந்துவிட்டான்.
தேவன் சற்று தூய இயல்பு படைத்தவனாக இருந்தான். அவனும் முதலில், நானே, அதாவது இந்த உடம்பே பிரம்மம் என்று தவறாக நினைத்தான். ஆனால் சில நாட்களிலேயே, முனிவர் கூறியதன் பொருள் அதுவாக இருக்காது, அதற்குமேல் ஏதோ இருக்கிறது என்பதை புரிந்துகொண்டான். எனவே அவன் முனிவரிடம் மீண்டும் சென்று, சுவாமி, இந்த உடம்பைத்தான் ஆன்மா என்று கூறினீர்களா? ஆனால் எல்லா உடம்புகளும் அழிந்து போவதை நான் காண்கிறேனே! ஆன்மா மரணமற்றது அல்லவா? என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் கண்டுபிடி. நீயே அது என்று கூறினார்.
அந்தத் தேவனும் உடம்பை இயக்குகின்ற பிராண சக்திகளே ஆன்மா என்பதுதான் முனிவர் கூறியதன் பொருளாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால் சாப்பிட்டால் பிராண சக்திகள் வலிமையுடன் இருப்பதையும், சாப்பிட்டாவிட்டால் அவை பலவீனம் அடைவதையும் சில நாட்களுள் அறிந்துகொண்டான். எனவே முனிவரிடம் சென்று, சுவாமி, பிராண சக்திகளையா ஆன்மாவென்று கூறினீர்கள்? என்று கேட்டான். அவர் மறுபடியும், நீயே கண்டுபிடி, நீயே அது என்றார்.
வீடு திரும்பிய தேவன் யோசிக்கலானான். ஆன்மா என்பது ஒரு வேளை மனமாக இருக்கலாம் என்று நினைத்தான். ஆனால் எண்ணங்கள் இப்போது நல்லதாக, மறுகணமே கெட்டதாக எத்தனையோ விதமாக இருப்பதை வெகுவாக அறிந்துகொண்டான். மாறுகின்ற மனம் ஆன்மாவாக முடியாது என்று கருதிய அவன் முனிவரிடம் சென்று, சுவாமி, மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். நீங்கள் அதையா சொன்னீர்கள்? என்று கேட்டான். அவரோ மறுபடியும், நீயே கண்டுபிடி என்று கூறிவிட்டார்.
தேவன் வீடு சென்றான். இறுதியில் தானே ஆன்மா என்று தெரிந்து கொண்டான். ஆன்மா எண்ணங்கள் அனைத்திற்கும் அப்பால் உள்ளது, ஒன்றேயானது, பிறப்பு இறப்பு இல்லாதது. அதனை ஆயுதங்கள் வெட்ட முடியாது, தீ எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது, காற்று உலர்த்த முடியாது, அது ஆதி அந்தம் இல்லாதது, அசைக்க வல்லது. அது உடலும் அல்ல, மனமும் அல்ல, இவை அனைத்திற்கும் அப்பால் உள்ளது. இவ்வாறு அறிந்த தேவன் திருப்தி அடைந்தான். உடலை நேசித்தால், பாவம், அந்த அசுரன் உண்மையை அறியவில்லை.
ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதை அறிய முற்பட்ட முனிவர் அந்தப் பொருள் நானே என்ற அனுபூதி பெறுகிறார்.
6. சிந்தனை செய்க!
அனுபூதி பெற்று, வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்துவிட்ட முனிவர்களை வசந்தகாலத் தென்றலுக்கு ஒப்பிடுகிறார் ஸ்ரீசங்கரர்: அமைதியும் மகிமையும் அடைந்துவிட்ட மகான்கள் இருக்கிறார்கள். தவழ்ந்துவரும் வசந்தம்போல் அவர்கள் மனிதகுலத்திற்கு நன்மை செய்கிறார்கள். இந்த சம்சாரப் பொருங்கடலை அவர்கள் கடந்துவிட்டார்கள்; பிறகும் அவ்வாறே கடக்க வேண்டுமென்று துளிகூட தன்னலமின்றி பாடுபடுகிறார்கள். சூரியனின் சுடுகதிர்களால் பொசுக்கப்பட்ட பூமியை நிலவின் கிரணங்கள் இயல்பாகக் குளிர்விப்பதுபோல், பிறரது துயரைக் களைவதற்காகப் பாடுபடுவது அவர்களின் இயல்பாகிவிடுகிறது (1. சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ
வஸந்தவத் லோகஹிதம் சரந்த:
தீர்ணா: ஸ்வயம் பீமபவார்ணம்
ஜனான் அஹேதுனான்யானபி தாரயந்த:
- விவேகசூடாமணி, 37.)என்கிறார் அவர். அதுபோலவே, இந்த உபநிஷத முனிவரும் அறுதிநிலை அனுபூதியை
அடைந்தபிறகு கருணைக் கண்களுடன் இந்த உலகைப் பார்க்கிறார். உலகம் என்னும் மாய வலையில் சிக்குண்டு மனிதர்கள் படுகின்ற துன்பம் அவரது கண்களில் தெரிகிறது. எனவே அவர்களை எல்லாம் அழைத்து வாழ்க்கையை ஒருமுறை சிந்திக்குமாறு கூறுகிறார் அவர். (17.) அறியாமைச் சேற்றிலிருந்து விடுபட்டு, அறிவொளி பெற்று, அந்த ஒளிக்கும் அப்பாலுள்ள உண்மையை உணர்வதற்கு இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை, எனவே பிரார்த்தனை செய்யுங்கள் (18) என்று அழைக்கிறார் அவர்.
வாயுரனிலமம்ருதமதேதம் பஸ்மாந்தக்ம் சரீரம்
ஓம் (3) க்ரதோ ஸ்மர க்ருதக்ம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர (17)
அத- இனி; இதம்-இந்த; சரீரம்- உடம்பு; பஸ்ம அந்தம்- சாம்பலாகும்; வாயு-பிராணன்; அம்ருதம்- அழிவுற்ற; அனிலம்- பிராணனை; க்ரதோ- மனமே; க்ருதம்- செய்தவற்றை; ஸ்மர- நினை.
17. இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பிலிருந்து
வெளியேறுகின்ற பிராணன் எங்கும் நிறைந்த
அழிவற்ற பிராணனுடன் கலந்துவிடும். ஓம். மனமே!
செய்தவற்றை நினைத்துப் பார், மனமே செய்த
வற்றை நினைத்துப் பார்.
ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டு முன்னேறும் போது, சிலவேளைகளில் நாம் லட்சியத்தை
1. ஓர் எழுத்தை உச்சரிப்பதற்கான நேரம் ஒரு மாத்திரை. ஓம் என்பதை 3. மாத்திரை காலம் நீட்டி ஓத வேண்டும்.
மறந்துவிடுவதுண்டு; அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீர்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது. இது சுய தூண்டுதல் எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன. அத்தகையதொரு மந்திரத்தை முனிவர் இங்கே நமக்குத் தருகிறார். உபநிஷதங்களைப் படிக்கும் போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணர்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும்.
இறைவனை நாடிச் செல்பவர்கள் ஆனாலும் சரி, சாதாரண வாழ்க்கையை நடத்திச் செல்பவர்கள் ஆனாலும் சரி வாழ்வின் நிலையாமையை அவ்வப்போது மனத்திற்கு எடுத்துக் கூறுவது நல்லது. வாழ்க்கையை எண்ணி பெரிதாக மனம் குமையவோ, அலட்டிக்கொள்ளவோ வேண்டியதில்லை என்ற உண்மை அதனால் நம் மனத்தில் உறுதிப்படுகிறது.
ஆண்டியும் சரி அரசனும் சரி அனைவரின் உடம்பும் இறுதியில் சாம்பலாகி மண்ணுடன் மண்ணாகக் கலக்கப் போகிறது. இதுவரை உடம்பையும் மனத்தையும் இயக்கி வந்த பிராணன் உடம்பிலிருந்து வெளியேறப் போகிறது. புலன்கள் ஒடுங்கப்போகின்றன. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நம்மை விட்டு அகலப் போகிறது-இந்த உண்மையை ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சிந்திப்பது வாழ்க்கைக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைத் தரும்.
இதுவரை நல்லது செய்யாவிட்டாலும் இனி செய்ய வேண்டும், இதுவரை இறைவனை நாடாவிட்டாலும் இனி நாட வேண்டும், என்று உயர் வாழ்க்கைக்கு ஒரு தூண்டுதலை இத்தகைய சிந்தனை தரும். எனவேதான் இந்தப் பிரார்த்தனையை ஒரு சுய தூண்டுதலாக நாம் கொள்கிறோம்.
7. வழி நடத்துவாய்!
நெருப்பையைக் கண்டுபிடித்தது மனித வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. நெருப்பைக் கண்டு வியந்த மனிதன் மெல்ல மெல்ல அதை வழிபட ஆரம்பித்தான். கடைசியாக அதை எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல இறைவனின் சின்னமாகவே வழிபடுவதை வேதங்களில் காண்கிறோம். அவ்வாறு அக்கினி தேவனை இறைவனாகக் கொண்டு பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.
ஒளிக்கு அப்பாலுள்ள உண்மையைக் கண்ட முனிவர் அந்த உண்மையை நாமும் அடைய வேண்டும் என்ற கருணைப் பெருநோக்கில், இவ்வாறு பிரார்த்தனை செய்யுமாறு நம்மிடம் கூறுகிறார்.
அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான்
விச்வானி தேவ வாயுனானி வித்வான்
யுயோத்யஸ்மஜ்ஜுஹுராணமேனோ
பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம (18)
அக்னே- அக்கினி தேவனே; தேவ- ஒளிப்பொருளே; அஸ்மான்- எங்கள்; விச்வானி- எல்லா; வயுனானி- செயல்களையும்; வித்வான்- அறிவாய்; ராயே- வினைப் பயன்களை அனுபவிப்பதற்காக; ஸுபதா- அனுபவப் பாதையில்; நய- அழைத்துச் செல்; அஸ்மத்- எங்கள்; ஜுஹுராணாம்- கொடிய; ஏன- தவறுகளை; யுயோதி- விலக்கு; தே- உனக்கு; பூயிஷ்ட்டாம்- பல; நம உக்திம்- வணக்கங்களை; விதேம- தெரிவிக்கிறோம்.
18. அக்கினி தேவனே, ஒளிப்பொருளே! எங்கள்
எல்லா செயல்களையும் அறிபவன் நீ. வினைப்பயனை
அனுபவிப்பதற்காக எங்களை அனுபவப் பாதை
யில் அழைத்துச் செல். எங்களைக் கொடிய தவறு
களிலிருந்து விலக்கு. உனிக்கு மீண்டும்மீண்டும்
எங்கள் வணக்கங்கள்.
தம்மை அனுபவப் பாதையில் அழைத்துச் செல்லுமாறு பிரார்த்திக்கிறார் முனிவர். அனுபவப் பாதை என்பது என்ன?
செயல்கள் பலன்களைத் தருகின்றன. நற்செயல்கள் நல்ல பலனையும், தீய செயல்கள் தீய பலனையும் தருகின்றன. பலன்கள் வந்தால் அதை அனுபவித்தேயாக வேண்டும். இதுவரை செய்துள்ள செயல்களை அறிகின்ற இறைவனே! இனி புதிய செயல்கள் செய்து பலன்கள் வராமல், செய்தவற்றிற்கான பலனை அனுபவிப்பதாக மட்டும் எங்கள் வாழ்க்கை அமையட்டும் என்பது இந்தச் சொற்றொடரின் பொருள்.
இவ்வாறு இறையருளை நாடி ஒரு பிரார்த்தனை பூர்வமான வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும் என்ற குறிப்புடன் ஈசாவாஸ்ய உபநிஷதம் நிறைவு பெறுகிறது.
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: