பதிவு செய்த நாள்
05
ஜூன்
2014
02:06
மதுரை : திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் தங்கத் தேரோட்டம் தடைபட்டுள்ளதால், நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில், கைங்கரியம் செய்ய மறுத்த சீர்பாதம் தாங்குவோரை எதிர்மனுதாரர்களாக இணைத்துக்கொள்ள உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட் கிளை, விசாரணையை ஒத்திவைத்தது. மதுரை வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில், சிலநாட்களைத் தவிர, மாலையில் தங்கத்தேர் வீதி உலா நடைபெறும். தேர் இழுக்க, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு பக்தர்களிடம் வசூலிக்கப்படுகிறது. மே 29 முதல் 30 வரை தேரோட்டம் நடக்கவில்லை. இதற்கு, நிர்வாகக்குளறுபடியே காரணம். இதனால், கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கிய பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கோயில் இணை கமிஷனர், தங்கரத கிரிவீதி உலா கட்டணம் 1500 லிருந்து 2500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், தங்களுக்குரிய பங்குத்தொகை எவ்வளவு என தெரிவித்தால்தான், கைங்கரியம் செய்வோம்; இல்லையெனில் செய்யமாட்டோம் என கைங்கரிய திரிசுதந்திர சபா செயலாளர் கூறியதின் பேரில், சீர்பாதம் தாங்குவோர் மே 28 ல் கைங்கரியம் செய்ய மறுத்துவிட்டனர், என அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேரோட்டம் தொடர்ந்து நடைபெறவும், அதற்கு தடையாக உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆர்.செந்தில்குமார் ஆஜரானார். கைங்கரியம் செய்ய மறுத்த சீர்பாதம் தாங்குவோரை எதிர்மனுதாரர்களாக இணைத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.