பதிவு செய்த நாள்
05
ஜூன்
2014
02:06
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா திறந்து வைத்தார். தமிழக, இந்துசமய அறநிலையத் துறை கோவில்களில், கோவில் வளாக மழைநீரை, குளங்களில் சேகரிக்க, ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருந்தன. காலப்போக்கில், இவை போதிய பராமரிப்பின்றி சீரழிந்தன. இந்நிலையில், பழைய கட்டமைப்புகளை புதுப்பிக்கவும், புதிதாக அமைக்கவும், மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஒவ்வொரு மண்டலத்திலும், 500 கோவில்களில், இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 1ம் தேதி, துவங்கிய இப்பணியை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க முடிவெடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள், ஸ்ரீ ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை வளாகம் ஆகிய பகுதிகளில், இக்கட்டமைப்பு நிறைவேற்றப்பட்டது.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா, அவற்றை நேற்று திறந்து வைத்தார். அறநிலையத் துறை கூடுதல் முதன்மைச் செயலர் கண்ணன், ஆணையர் தனபால், திருப்போரூர் எம்.எல்.ஏ., மனோகரன், மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் கோதண்டபாணி உட்பட, பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி, மாமல்லபுரம் கோவிலில் இருந்து, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணியை அமைச்சர் துவக்கி வைத்தார். இந்த பேரணி, பேரூராட்சியின் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இணை ஆணையர் செந்தில் வேலவன் கூறும்போது, “ஒவ்வொரு கோவிலிலும், அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தொல்லியல் துறை பொறுப்பில் உள்ள கோவில்களில், அத்துறையின் அனுமதி, மேற்பார்வையுடனே, இதை அமைக்கிறோம்,” என்றார்.