பதிவு செய்த நாள்
07
ஜூன்
2014
12:06
காங்கேயம்: காங்கேயம் அருகே உள்ள, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருப்பூர் மாவட்டத்தில், அதிக வருவாய் தரும் கோவில்களில், இக்கோவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தினமும் உள்ளூர் மக்களைவிட, வெளியூர் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இதனால், சிவன்மலையை, தமிழக அரசு, சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், மலைப்படிகளில் ஏறியும், மலைப்பாதையில் வாகனங்களில் சென்றும், சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பாதை வழியாக செல்வதற்கு, டூவீலருக்கு, ஐந்து ரூபாயும், காருக்கு, 20 ரூபாயும், வேன், பஸ்களுக்கு, 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில், 400க்கு மேற்பட்ட வாகனங்களும், விசேஷ நாட்களில், 1,000க்கு மேற்பட்ட வாகனங்கள், மலைப்பாதை வழியாக, இக்கோவிலுக்கு வந்து செல்கின்றன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில், மேற்கூரை வசதி ஏதும் இல்லை. அதனால் வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் பாதிக்கப்படுகிறது. தற்போது கடும் வெயிலால், சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள், திரும்பிச் செல்லும் போது, வாகனத்தில் அமரக்கூடி முடியாதபடி, சுடுகிறது. இனி வரும் மழைக்காலத்திலும், வாகனங்கள் மழையால் பாதிக்கப்படும், அபாயம் உள்ளது. மேலும், வாகன நிறுத்துமிடம், இயற்கையாக, மலை மீது, தனியாக உள்ளதால், பல சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுத்தும், ஃபோட்டோக்கள் எடுத்தும் செல்கின்றனர். இதுபோன்றவர்கள், சிறிது நேரம், நிழலில் நிற்கக்கூட, இடவசதி இல்லை. தவிர, வாடகை வாகனங்களில் வரும் பக்தர்கள், கோவிலுக்கு செல்லுகையில், அந்த வாகன டிரைவர்கள், சிறிது நேரம் அமர்வதற்கு, சாதாரண பஸ் ஸ்டாப் போன்ற, ஒரு நிழற்கூரை அமைப்பு கூட அங்கில்லை. அதிக வருவாய் வரும் இக்கோவில் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதியையும், அவர்களது வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தும் வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும், என எதிர்பார்க்கின்றனர்.