பதிவு செய்த நாள்
10
ஜூன்
2014
02:06
அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம். ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம். சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும். தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.
பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.
சிவாலயங்களில் மாலை 4.30 - 6 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.