பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
09:06
முருகன், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்தவர். ஆறு குழந்தைகளாக பிறந்த அவரை, பார்வதிதேவி ஒன்றாக்கினாள். கார்த்திகை பெண்கள் ஆறுபேர் அவரை வளர்த்தனர். முருகனின் கரங்கள் அபய வரத நிலையில் உள்ளன. யாமிருக்க பயமேன் என்று அவர் தன் பக்தர்களை, எந்த பயமும் கொள்ள வேண்டாம் என்பதை அபயகரத்தின் மூலம் உணர்த்துகிறார். மற்றொரு கரம், கேட்ட வரம் தரும் வரதஹஸ்த நிலையில் உள்ளது. எதிரிக்கு கூட மோட்சம் அளித்த அற்புதமான கரம் அவருடையது.
தாமரை வெற்றி ரகசியம்: முருகனின் வலதுபுறம் வள்ளி, இடதுபுறம் தெய்வானை என்ற துணைவியர் இருக்கின்றனர். இவர்களில் வள்ளியின் கரத்தில் தாமரை மலரும், தெய்வானையின் கையில் நீலோற்பல மலரும் இருக்கும். முருகனுக்கும் தந்தையைப் போல மூன்று கண்கள் உண்டு. இவை சந்திரன், அக்னி, சூரியன் ஆகும். இந்தக் கண்கள் எப்போதும் மூடுவதில்லை. இமைக்காமல் பக்தர்களைக் காப்பவர் முருகன். அவரது சூரியக்கண், வள்ளியின் கையிலுள்ள தாமரையைப் பார்ப்பதால், அது எப்போதுமே மலர்ந்திருக்கிறது. சந்திரக்கண் தெய்வானையின் கையிலுள்ள நீலோற்பலத்தைப் பார்ப்பதால் அதுவும் மலர்ந்திருக்கிறது. இவ்வாறு மலர்ந்த பூக்களைப் போல, முருகனை வணங்குவோரின் வாழ்வு மலர்ந்திருக்கும். அவர்களது செயல்பாடுகள் எதுவாயினும் வெற்றி பெறும். இதுவே வள்ளி, தெய்வானை தாமரை, நீலோற்பல மலர்கள் ஏந்தியுள்ளதின் வெற்றி தத்துவம்.
உலகை சுற்றிய காரணம்: ஒரு கனிக்காக உலகத்தை முருகன் வலம் வந்ததாகவும், விநாயகர் அம்மையப்பரை வலம் வந்து அதை எளிதில் பெற்றதாகவும் வரலாறு. இதற்காக, முருகன் கோபித்துக் கொண்டு பழநி சென்று விட்டார் என்பது புராணக்கதை. ஆனால், இதில் ஆழமான தத்துவம் புதைந்து கிடைக்கிறது. சிவம் என்ற ஒன்றிலேயே எல்லாவற்றையும் கண்டார் விநாயகர். உலகமே அவருக்குள் அடக்கம் என்று அவரது பார்வையில் பட்டது. எல்லாவற்றிலும் சிவம் இருக்கிறது. எனவே, உலகம் முழுமையும் சுற்றி வர வேண்டும் என்பது முருகனின் எண்ணம். அதாவது, சிவத்துக்குள் எல்லாவற்றையும் காணலாம், எல்லாவற்றிலும் சிவனைக் காணலாம் என்ற அரிய தத்துவத்தை உணர்த்தவே, அண்ணனும், தம்பியும் இத்தகைய விளையாடல் ஒன்றை நடத்திக் காட்டினர். விநாயகரும் முருகனும் பாலும் சுவையும் போல. இரண்டையும் பிரிக்க முடியாது. அனைத்திலும் சிவத்தைப் பார்ப்பவர்கள் ஞானமாகிய கனியை அடையலாம் என்பதையே அவர்களின் உலக உலா நமக்கு எடுத்துச் சொல்கிறது.
விதியை வெல்லும் வழி: படைப்புக்கு ஆதாரமான ஓம் மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் இட்டார் முருகன். பிறகு, தானே படைப்புத்தொழிலைத் தொடங்கினார். காக்கும் தொழிலையும், அழிக்கும் தொழிலையும் அவரே மேற்கொண்டார். அவரால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் எவ்வித பாவமும் இன்றி பிறந்ததால், எமன் அவர்கள் அருகே வர அஞ்சினான். இதனால் தான், உடல்நிலை சரியில்லாமல், மரணத்தின் பிடியில் உள்ளவர்கள் முருகப்பெருமானைச் சரணடைகிறார்கள். அதிலும், திருச்செந்துõர் முருகனின் பன்னீர் இலை திருநீறும், அங்கே ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கம் ஸ்தோத்திரமும் நோய் தீர்க்கும் வல்லமை பெற்றவை. இன்னும் எளிமையாக,வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே! செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை என்ற பாடலை தினமும் பக்தியுடன் பாடுபவர்கள், வாழ்வின் இறுதிவரை நோயின்றி வாழ்வதுடன், விதியை வெல்வர் என்பது ஐதீகம்
வெற்றிவேல்: முருகனின் வேலின் மேற்பகுதி கூர்மையாகவும், நடுவில் பரந்தும், நீண்ட கைப்பிடி கொண்டதுமாக இருக்கும். மாணவர்கள் கருத்துக்கூர்மையுடன் படிக்க வேண்டும். அந்தக்கல்வியின் மூலம் பரந்த அறிவைப் பெற வேண்டும். அந்த அறிவின் மூலம் ஆழ்ந்து சிந்தித்து உலகத்திற்கு தேவையான நன்மைகளைச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. வைகாசி விசாக நன்னாளில், முருகனின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.