பதிவு செய்த நாள்
13
ஜூன்
2014
03:06
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் , புதிய ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகளாகியும் , இதுவரை கோபுரம் எழுப்பும் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. பக்தர்கள் மன வருத்தத்தில் உள்ளனர் . தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. குழந்தை வரம் வேண்டுபவர்கள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வருகின்றனர் . ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்தி செலுத்துவர் . இந்த கோயிலில் 1935 ல் கட்டப்பட்ட மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலை சுற்றி , பிரகார மண்டபங்கள் கட்டப்பட்டது. மேலும் , பக்தர்கள் தங்குவதற்கு பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதால் , கோயிலின் ராஜகோபுரம் வெளியே தெரிவதில்லை . இதையடுத்து புதிய ராஜகோபுரம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்களும் , பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2010 நவம்பரில் , அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனால் புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியை சேர்ந்த , தொழில் நுட்ப குழுவினர் , புதிய ராஜகோபுரம் கட்டும் இடத்தில் மண் பரிசோதனை செய்தனர் .பின்னர் புதிய ராஜகோபுரத்திற்கு கல்காரம் வரை கட்டுவதற்கு , கல் கொண்டு வரப்பட்டு , கல்லை வடிவமைக்கும் பணி நடந்தது. அந்த பணியும் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களும் , கோயிலுக்கு வரும் பக்தர்களும் மனவேதனை அடைந்துள்ளனர் . விரைவில் புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு , கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.