பதிவு செய்த நாள்
18
ஜூன்
2014
11:06
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவிலில், வரும், 21ம் தேதி ராகுபெயர்ச்சி நடைபெறுவதையொட்டி, லட்சார்ச்சனை துவங்கியது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், ராகுதோஷ நிவர்த்தி தலமாக நாகநாத ஸ்வாமி கோவில் விளங்குகிறது. சுசீல முனிவரின் குழந்தையை தீண்டியதால், ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. தன் சாபத்தை போக்குவதற்காக, நாகநாத பெருமானை, மாசி மகா சிவராத்திரி நாளில், ராகு வழிபட்டார். ராகுவின் பூஜையை மெச்சிய சிவபெருமான், ‘என்னருள் பெற்ற நீ, என்னை வழிபட்டு பின், உன்னை வணங்கும் அடியார்களுக்கு, உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம், திருமணதோஷம் ஆகியவற்றை நீக்கியருள்வாய்’ என வரமளித்தார். பெரிய புராணம் அருளிய சேக்கிழாரின் ஆன்மார்த்த தலமாகவும் உள்ளது. சேக்கிழார், இத்தலத்தில் பல திருப்பணிகள் செய்துள்ளார். ராகுவைப் போல் கொடுப்பாரில்லை என்பது பழமொழி. ராகுவை பாலபிஷேகம், உளுந்து சாதம் மற்றும் தோஷங்களுக்குரிய விளக்குகளை ஏற்றி வழிபட்டால், துன்பங்களை நீக்குவார். இத்தலத்தில் மட்டுமே ராகுபகவான், நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக வீற்றிருக்கின்றார். இங்கு, ராகுவுக்கு பாலபிஷேகம் நடைபெறும் போது, அந்த பால் நீலநிறமாக மாறி, பாதத்தை அடைந்தவுடன் மீண்டும் வெண்மையாக மாறி விடும்.கலை மற்றும் நீதிக்கு அதிபதியாக விளங்கும் ராகு, ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை, பெயர்ச்சி அடைவார் . அதன்படி, வரும், 21ம் தேதி காலை, 11.18 மணிக்கு, துலாம் ராசியிலிருந்து, கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். ராகுபெயர்ச்சியை யொட்டி பரிகார ராசிக்காரர்களுக்காக, இரண்டு கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் காலை, முதற்கட்ட லட்சார்ச்சனை தொடங்கியது. ஆலய உதவி ஆணையர் பரணீதரன் முன்னிலையில், ராகுபகவான் சன்னதியில் ஆலய முதன்மை அர்ச்சகர் நாகராஜகுருக்கள் தலைமையில், திரளான சிவாச்சாரியார்கள் பங்கேற்ற லட்சார்ச்சனை துவங்கியது. 19ம் தேதி லட்சார்ச்சனை பூர்த்தி நடக்கிறது. தொடர்ந்து, 21ம் தேதி, நான்கு கால யாகசாலை பூஜையுடன் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. வரும், 23ம் தேதி முதல், 24ம் தேதி முடிய, இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் மாரியப்பன், உதவி ஆணையர் பரணிதரன் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்கின்றனர்.