பதிவு செய்த நாள்
21
ஜூன்
2014
12:06
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில் காலபைரவர் தேய்பிறை அஷ்டமி மற்றும் குரு பெயர்ச்சி, ராகு,கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு, கணபதிஹோமம், அஷ்ட லட்சுமி ஹோமம், அஸ்ட பைரவஹோமம், கோ பூஜை, அஸ்வபூஜை நடந்தது. இதனை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், வெள்ளை பூசணியில், தீபமேற்றி, கால பைரவருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், காலை, 9 மணிக்கு, கால பைரவருக்கு, 28 வகையான அபிஷேகம், ராஜ அலங்காரம், சோடச உபசார பூஜை, தீபாராதனை நடக்கிறது. நேற்றிரவு, 10.30 மணிக்கு, கால பைரவருக்கு அஸ்ட பைரவர் யாகம், சத்ருசம்ஹார யாகம், குருதி யாகம், 1008 கிலோ வரமிளகாய், 108 கிலோ மிளகு கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, கடந்த வாரம், 13ம் தேதி, மாலை குருபகவான் பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பெயர்ச்சி சிறப்பு யாகம், குரு ப்ரீத்தி பரிகார யாகம், குரு மூல மந்திர யாகம், குரு பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இன்று, ராகு, கேது பெயர்ச்சி, ராகு பகவான் துலாம் ராசியில் இருந்து, கன்னி ராசிக்கும், கேது பகவான், மேஷ ராசியில் இருந்து, மீன ராசிக்கும் இடம் பெயர்கிறார். இதனை முன்னிட்டு, ராகு, கேது பகவானுக்கு, சிறப்பு பரிகார பூஜை யாகம், ராகு கேது மூல மந்திரயாக பூஜை, 12 ராசிக்கும், 27 நட்சத்திரத்துக்கும் பரிகார பூஜை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் அமுதசுரபி உத்தரவின் பேரில், அர்ச்சகர் கிருபாகரன் செய்திருந்தார்.