பதிவு செய்த நாள்
03
ஜூலை
2014
11:07
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா கோர்ட் உத்தரவுப்படி கொடியேற்றத்துடன் துவங்கியது. கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், குங்குமகாளியம்மன் கோயில் திருவிழாக்களை, நடத்த உத்தரவிடக் கோரி ,மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இதனை தொடர்ந்து ஐகோர்ட் நீதிபதிகள், சிவங்கை சமஸ்தானம், இந்து அறநிலையத்துறை, நான்குநாட்டார், உட்பட இது தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்தினர். தேரோட்டம் இல்லாமல்,பாரம்பரிய முறைப்படி திருவிழா நடத்த உத்தரவிட்டனர். சில நாட்களுக்கு முன் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக நான்குநாட்டாரிடம் அறநிலையத்துறை மற்றும் அதிகாரிகள் பேசினர். பேச்சுவார்த்தைக்கு பின் , கடந்த 30 ந்தேதி கோர்ட்டில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர்.
கொடியேற்றம்: கோர்ட் உத்தரவுப்படி கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், ஆனித்திருவிழா நேற்று காலை 9.50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. சந்திரசேகர குருக்கள் கொடியேற்றி, சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.