பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
கடவுள் உலகைத் தாங்குகிறார். என்றாலு<ம் அந்தக் கடவுளையும் தாங்குகிறது அவரது வாகனம். ஆழ்ந்த உட்பொருளைக் குறிக்கும் ஒரு குறியீடு என்பதாலோ, முன்னோர்கள் வாகனத்தைப் படைத்திருக்கிறார்கள்.
மயில்: மன்னன் பிரபாகரனுக்கு நான்கு மகன்கள். சூரன்- பத்மன் எனும் இரட்டையர், சூரபத்மன் எனும் ஒரே அசுரனாகப் பிறப்பெடுத்தனர். திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதைத்தார். சூரபத்மன் மீண்டும் இரண்டாகப் பிளவுபட்டு, சூரன் மயிலாகவும், பத்மன் சேவலாகவும் உருப்பெற்றார்கள். இந்த இருவரும் தன் குழந்தைப் பருவத்தில் அகத்திய முனிவரிடம் உபதேசம் பெற்றதால், முருகப்பெருமான் தோன்றப்போவதை உணர்ந்த பேறு பெற்றவர்கள். அந்த முருகனுடனேயே எப்போதும் இருக்க விரும்பி தவம் இயற்றியவர்கள். ஆனால், அசுர குணத்தால் முருகனால் அழிக்கப்பட வேண்டிய சூழ்நிலை அமைந்தது. ஆனால், அவர்கள் விருப்பப்படியே சூரனை மயிலாக்கித் தன் வாகனமாக ஏற்றார். பதுமனை சேவற் கொடியாக்கி தன் கையில் ஏந்தினார்.
புலி: மகிஷாசுரனின் தங்கை மகிஷி, காலவமுனிவரின் பத்தினியாக இருந்தவள். ஒருமுறை தன் கணவரை மகரிஷியே என அழைப்பதற்குப் பதிலாக மகிஷியே என்று அழைத்ததால், அவர் சாபத்தால் மகிஷி எனும் எருமைத்தலையுடைய அரக்கியானாள். பிறகு, பிரம்மதேவனை நோக்கி தவம் செய்து, ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் மைந்தனால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என்கிற அரிய வரத்தைப் பெற்றாள். அவளை வீழ்த்தவே, சிவ- விஷ்ணு தேஜஸின் இணைப்பாகத் தோன்றினார் ஐயப்பன்.
குழந்தையில்லாத பந்தள மன்னன், காட்டில் கிடைத்த அந்த மணிகண்டனை எடுத்து வளர்த்தான். மணிகண்டன் வந்த பிறகு, மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான். இருவரும் வளர, எங்கே தன் மகனுக்குப் பட்டம் கிடைக்காதோ என பயந்த பந்தள ராணி, தீரா தலைவலி தோன்றிய மாதிரி நடித்தாள். புலிப்பால் அருந்தினால் ராணியின் நோய் தீரும் என அரண்மனை வைத்தியர் கூற, மணிகண்டன் காட்டிற்குச் சென்றான். அங்கு முனிவர்களுக்கு தொல்லை தந்து கொண்டிருந்த மகரிஷியை வதைத்தான். அது கண்டு மகிழ்ந்த தேவேந்திரன், தானே புலியாகி அவருக்கு வாகனமானான்.
மூஞ்சூறு: தன்னைப் போலவே யானை முகம் படைத்த ஒருவனால் மட்டுமே தனக்கு அழிவு நேர வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் கஜமுகாசுரன். அவனை அழிக்க விநாயகப் பெருமான் முன் வந்தார். தன் தந்தத்தை உடைத்து கஜமுகாசுரன் மேல் ஏவினார். அதைக் கண்டு பயந்த கஜமுகாசுரன், தன் உருமாறும் சித்தியால் மூஞ்சூறு வடிவம் கொண்டு தப்பியோட முயன்றான். விநாயகர் விடாமல் அவனைத் துரத்தி அந்த மூஞ்சூறின் மேல் ஏறி, அதைத் தன் வாகனமாக்கிக் கொண்டார்.
ஆணவம் பிடித்தவர்கள் தங்களை ஒடுக்கிக் கொண்டு சிறியவர்களாக்கி விட்டால், அந்த நிலையிலும் அப்படிப்பட்டவர்களைக் கூடத் தாங்கிக் கொள்ளும் வகையில் லேசாகி விடக்கூடிய பரம கருணாமூர்த்தி விநாயகர். இதற்கு அத்தாட்சியாக இந்த யானையை அந்த மூஞ்சூறு அநாயசமாகத் தூக்கிக்கொண்டு போகிறது.
கருடன்: காசிய முனிவரின் இரு மனைவிகளில் ஒருத்தியான கத்ரு, நாகங்களைப் பிள்ளைகளாகப் பெற்றாள். இன்னொருத்தியான விநதை, அருணனை (இவன் பின்னாளில் சூரியனுக்கு சாரதியானான்) யும் கருடனையும் பெற்றாள். ஒருநாள் கத்ரு விநதையிடம், இந்திரன் குதிரையான உச்சை சிரவஸின் நிறம் என்ன என்பதைச் சொல். தவறாகக் கூறினால் நீ எனக்கு அடிமை என்று கூறினாள். வெண்மை என்று விநதை கூற, இல்லவே இல்லை. அது கருநிறம் என்று கூறி, வஞ்சனையால் அந்த உச்சைசிரவஸின் உடல் முழுதும் தன் மகள்களான கருநாகங்களை கொடி போல் சுற்றி, அதனைக் கருமையாக்கி, விநதையை அடிமையாக்கினாள் கத்ரு. தேவாம்ருதத்தை, தன் குழந்தைகளான நாகங்களுக்குக் கிடைக்கச் செய்தால் அவளை விடுதலை செய்வதாகவும் சொன்னாள் கத்ரு. அமிர்தத்தைக் கொண்டுவர தேவலோகம் சென்ற கருடன், நினைத்தப்படியே அமிர்தத்துடன் புறப்பட, எவரும் அவளை எதிர்கொள்ள இல்லாத நிலையில், திருமால் தோன்றி தடுத்தார். அவனை மெச்சி, வேண்டும் வரம் கேள் என்றார். கருடனோ ஆணவத்துடன், வரம் எதுவும் எனக்கு வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் நான் தருகிறேன், கேளுங்கள் என்றான். உடனே திருமால், நீ எனக்கு வாகனமாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வண்ணமே திருமாலுக்கு வாகனமான கருடன், பெரிய திருவடி எனும் பட்டத்தையும் பெற்றான்.
ரிஷபம்: மகாபிரளயம் நடந்து முடிந்தது. உலக உயிரினங்கள் எல்லாம் அழிந்துவிட, ஊழிக்கூத்தாடுகிறார் மகாகாலரான ஈசன். அப்போது தர்ம தேவதை அவரை வந்து சரணடைகிறாள். அனைத்து உயிர்களும் அழிந்து விட்டனவே! நானும் அழிய வேண்டியதுதானா? என்று முறையிடுகிறாள். தர்மத்துக்கு எந்நாளும் அழிவில்லை. நான் எப்படி சாஸ்வத சத்தியமோ அப்படியே தர்மமும் சத்தியமே! பிரளயத்தால் அழிந்தது எல்லாம் மீண்டும் தர்மப்படி வெளிப்பட்டே ஆக வேண்டும். எனவே, அஞ்சாதே! தர்ம தேவதையே! காளை வடிவம் கொண்டு எனக்கு வாகனமாவாய். உன்னை என் வாகனமாக ஏற்கிறேன் என்றார் ஈசன். தவம், தூய்மை, தயை, சத்தியம் என்ற நான்கு தத்துவங்களையும் நான்கு கால்களாகக் கொண்டு தர்ம தேவதை காளை வடிவு கொண்டு ஈசனுக்கு வாகனமாயிற்று. ஈசனும் அதன்மீது ஆரோகணித்து ரிஷபாரூடர் என்னும் பெயர் பெற்றார்.