பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
சித்திரையை வரவேற்க, பத்தரை மாற்று தங்க நிறத்தில், தகதகக்கும் அழகுடன் பூத்துக் குலுங்குகிறது கொன்றைமரம். பூ தொடுக்கும் சிரமத்தைக் கூட பக்தனுக்குத் தந்துவிடாமல், தானே சரம்சரமாய், கொத்துக் கொத்தாய் மலர்ந்து ஈசன் சடையிலும் பக்தர்கள் மனதிலும் அதிப்பிரகாசமாய் ஜொலிக்கும் தங்க மலரான சரக்கொன்றை மலர்களை காண்போம். தென்னாடுடைய சிவன், எந்நாட்டவர்க்கும் இறைவன். மாசற்ற மாணிக்க ஜோதியாய் பொன்னாய் ஒளிரும் முக்கண்ணனின் மின்னல் சடையினை அலங்கரிக்கும் பேறுபெற்ற மலர் சரக்கொன்றை. இதன் மஞ்சள் நிறம், பார்த்த மாத்திரத்தில் மனதைக் கொள்ளை கொள்ளும். இந்த மலர் பூக்கும் விதத்தின் அழகினைச் சொல்லி மாளாது. இதன் அழகு, வடிவம், பூக்கும்விதம், மாலையாய்- சரம்சரமாய் தொங்கும் தோற்றம் என அனைத்துமே புராண காலம் தொடங்கி, இன்றைய படைப்பாளர்கள் வரை தங்களது பாட்டில் இடம்பெறச் செய்யாத படைப்பாளர்களே இல்லை எனச் சொல்லலாம். என் குறுகிய அறிவினைக் கொண்டே ஒரு நூறு பாடல்களையாவது சரக்கொன்றை மலர்களுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்... அந்த அளவுக்குக் கவிஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டதாகத் திகழ்கிறது சரக்கொன்றை மலர்.
என் சிறு வயதிலேயே, என் இசை குருவான என் அம்மா,
சடையிலே திங்களும் கங்கையும் கொன்றையும்
இடையிலே புலித்தோலும் கழலிலே பொற்சிலம்பும்
உடுக்கையும் கையிலோடும் மானும் மழுவும்
இடுக்கண் களைந்திட்ட கடைக்கண் பார்வையும்...
என்ற பாடலைச் சொல்லிக் கொடுத்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் அந்த சிறுவயதில் புரியக்கூடிய வகையில் விளக்கம் சொல்லி, சிவனுக்கும் கொன்றை மலர்களுக்கும் உள்ள மிக நெருங்கிய பந்தத்தைப் புரிய வைத்துள்ளாள். இது மட்டுமா! மார்கழி மாதம் வந்துவிட்டால், திருப்பாவையும் திருவெம்பாவையும் பாடாமல் இருக்க முடியுமா என்ன ! திருவெம்பாவையில் மாணிக்கவாசக சுவாமிகள்,
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி சூழ் கொன்றைத் தார் பாடி
என்ற வரிகளையுடைய, காதார் குழையாட என்று தொடங்கும் பாடலைச் சொல்லிக் கொடுத்து, சிவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றிப் பேசுங்கள் என்ற அர்த்தத்தில் பாடி எழுப்புவதாகவும் விளக்கம் சொல்வாள். இப்படி ஒன்றா... இரண்டா? சரக்கொன்றை மலர்களின் புகழ்பாடும் பாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே...
என்ற பாடலை அறியாதாரும் உண்டோ?
சிவனுக்குரிய, சிவனுக்கேயுரிய மலரான சரக்கொன்றை எனும் மஞ்சள் மங்கல மலரை தேவாரப் பாடல்களில் பலவாறாகப் பாடி அதன் மகிமையை நமக்குப் புரிய வைத்திருக்கிறார்கள்.
பொங்காடரவம் புனலும் சடைமேற் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் உள்ளம் குளிர்வித்தார்
என்று ஞான சம்பந்தரும்,
பொன்றிகழ் கொன்றைமாலை புதுப்புனல் வன்னிமத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து...
என்று நாவுக்கரசரும்,
மருவார் கொன்றை மதி சூடி
என்று சுந்தரரும் கொன்றைமலர் சூடிய சிவ பெருமானை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விடுவதை உணரமுடிகிறது. கொன்றை மலர்களையே சிவன் மிகவும் விரும்பி அணிந்தான் என்பதால் சிவனையே, கொன்றை வேய்ந்தான் என்று புராண இலக்கியங்கள் பேசுகின்றன.
தமிழ் இலக்கியமோ மங்கலமலரான சரக்கொன்றையைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து, வித விதமான தமிழ்ப் பூக்களால் அர்ச்சிக்கின்றது என்றே சொல்லத் தோன்றுகிறது.
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும்
சாத்தும் தில்லையூரார் தம் பாகத்து உமை மைந்தனே
என்று அபிராமிபட்டர் தன் அபிராமி அந்தாதியில் வைத்தார். காளமேகப் புலவரின் கடைமொழி மாற்றுப் பாடலோ,
கொன்றைமலர் தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்று குழல் ஊதினான் நீள்சடையான் பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவு அணையில் கண் வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்
என்ற வரிகளின் மூலம் கொன்றை மலர் தரித்தான் கோபாலன் என்று நம்மை சற்றே குழப்பிவிட்டு, பின் கடைசி வரியை முதலில் வைத்து அர்த்தம் கொண்டால், புலவர் சொல்வது நமக்குப் புலனாகும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, சிக்கலில் வாழும் சிவன் கொன்றை மலர் தரித்தவன்; கோபாலன் ஆன கண்ணன் புல்லாங்குழல் எடுத்து ஊதினான். நீண்ட சடையுடைய சிவபெருமான் ருத்ராட்சம் (அக்கு) அணிந்தவர், மாயனான திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது துயில் கொண்டவர் என்ற பொருளில் பாடியுள்ளது புரியும்.
சங்க இலக்கியம் கொண்டாடும் 99 வகைப் பூக்களில் இடம் பெற்றுள்ளது சரக்கொன்றை. அதனைக் குறிஞ்சிப் பாட்டும், ஐங்குறு நூறும், குறுந்தொகையும் பலவாறாகக் கொண்டாடி மகிழ்கின்றன.
பொன்னென மலர்ந்த கொன்றை மணியெனத்
தேம்படு காயமலந்த தொன்றியொடு
நன்நலம் எய்தின பிறவே நினைக்
காணிய வருதும் நாமே...
எனத் தொடர்கிறது தலைவன் சொல்வதாக வரும் ஐங்குறு நூற்றுப் பாடல். தலைவியும் சளைத்தவளில்லை. தலைவன் மீது தான் வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வரிகளில்,
வண்டு படத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற்றோன்றும் புதுப் பூங்கொன்றை
காலங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய் வழங்கலரே
என்கிறாள். அதாவது புதிதாகப் பூத்த சரக்கொன்றை மலர்கள். இது கார்காலம் என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஏனெனில், என் தலைவர் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார் என்கிறாள்.
முல்லை நிலத்துக்குரிய மஞ்சள் வண்ண சரக்கொன்றை மலர்களை, ஈங்கை இலவம் தூங்கிணர்க் கொன்றை என்று குறிப்பிடுகிறது குறிஞ்சிப்பாட்டு. கொன்றையின் மலர்க் கொத்துக்கள் மண்ணை நோக்கித் தொங்கும் நிலையில் இருப்பதை உணர்த்துகிறது.
இப்படி சரக்கொன்றை மலர்களை நாம் மட்டுமே கொண்டாடுகிறோமா? இந்திய மலர் என்று சொல்லிக்கொள்வதில் நாம் பெருமை கொள்ளலாம். என்றாலும் கூட, இது ஆஸ்திரேலியாவின் தேசிய மலராகவும், நம் கேரளத்தின் மாநில மலராகவும் விளங்குகிறது. கேரளாவில் விஷுக்கனி தினத்தன்று கொன்றை மலர்களால் கோலங்களை அலங்கரிக்கிறார்கள். தங்க மழை, கோல்டன் ஷவர் என்று பிற தேசங்கள் ஆனந்தமாய் வர்ணிக்கின்றன. சரக்கொன்றை மரங்கள் அபரிமிதமாய், மஞ்சள் மலர்களைப் பிறப்பித்து, பூமியின் பரப்பை மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கும் கார்காலங்களில் காடுகளே அழகு பெறுவதாக உலக இலக்கியங்கள் கருதுவதால், இதனை காடுகளின் கொண்டாட்டம் என்று போற்றுகின்றன.
இத்தனை பெருமைகளுக்குரிய மலர் பல்வேறு கோயில்களில் தல விருட்சமாகவும் விளங்குவதில் வியப்பொன்றுமில்லை. திருக்கண்ணார் கோயில், திருபந்தணை நல்லூர், திருப்பத்தூர், அச்சிறுப்பாக்கம், திருச்சாத்தமங்கை, திருத்துறையூர், திருச்சோபுரம், திருவதிகை, திருஅஞ்சைக்களம் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பந்தணை நல்லூர் கொன்றை மரத்தின் அடியில்தான், பசுவாகிய அம்பிகை சாப விமோசனம் பெற்றாள்.
சரக்கொன்றை மலர்களால் பிரணவ ஸ்வரூமாக இருப்பதால் பிரணவஹார புஷ்பம் என்றும் ஓங்கார மலர் என்றும் பெருமை பெறும். இம்மரத்தின் அடியில்தான் வான்மீகி முனிவர் தவம் இயற்றி, அவரைச் சுற்றி புற்றும் (வான்மீகம்) வளர்ந்து வான்மீகியானதாக அறிகிறோம். அச்சிறுப்பாக்கம் தல வரலாற்றிலும் அழகிய கொன்றை மலருக்கு விசேஷ இடம் உண்டு.
திருப்புத்தூரின் புராதனப் (புராண) பெயரே கொன்றைவனம்தான். தவம் செய்வதற்கு ஏற்ற தவ வலிமை மிக்க பூமி. இங்கே குடிகொண்டிருக்கும் ஈசன் திருத்தளிநாதர் என்ற பெயர் பெறுகிறார். மகாலட்சுமியின் கடும் தவத்தின் விளைவாக ஈசன் காட்சி கொடுத்து, அவள் விரும்பியபடியே சிவ தாண்டவங்களில் சிறந்த கவுரீதாண்டவத்தை அவளுக்கு ஆடிக்காட்டி, அவளையும் தன் நாமத்துடன் இணைத்துக் கொண்டு திருத்தாளிநாதர் ஆனார் என்கிறது தலபுராணம்.
சரக்கொன்றை மலர்களை அரவிந்த அன்னையும் சற்று வித்தியாசமாகப் பார்த்துள்ளதாக அறியமுடிகிறது. கற்பனை என்று இந்த மலருக்குப் பெயரிட்ட அன்னை, மேலும் அந்த மலர் பற்றிய விளக்கத்தில், பலதரப்பட்டது (உண்மைதான். புலி நகக் கொன்றை, மயில் கொன்றை, சரக்கொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, மந்தாரக் கொன்றை, சிறு கொன்றை), கவர்ச்சியானது (ஓம் என்ற வடிவத்தில் உள்ளது) என்று சொன்னவர், ஏனோ இந்த மலரை, உண்மையின் இடத்தில் வைத்துவிடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
இதன் மருத்துவப் பலன்களும் மகத்தானவை. ஆனால், மருத்துவ ஆலோசனை அல்லாது பயன்படுத்த இயலாது என்பதால் விவரிக்கவில்லை. படர்தாமரை, வாதம், வலிப்பு, மலச்சிக்கல், வயிற்று உப்பிசம் என்று பல பிரச்னைகளுக்கு இது நிவாரணம் அளிப்பதால் ஆயுர்வேதம் இதனை, நோய்க்கொல்லி எனப் பொருள்படும் வகையில் அர்க்வதா என்றழைக்கிறது.
இந்திய தேசம், சிவனுக்குரிய கொன்றை மலரை கவுரவிக்கும் வகையில் 20 ரூபாய் நோட்டில் கொன்றை மரத்தைப் பொறித்துள்ளது. இந்திய மாநிலங்கள் மஞ்சள் கொன்றை மலரை சோனாலு (வங்காளம்), கர்மலு (குஜராத்), தன்பஹார் (இந்தி), பஹாவா (மராத்தி), கனிகொன்னா (மலையாளம்), சதுரங்கலு, க்ரிதமாலா (சமஸ்கிருதம்) என்று பலவாறாக அழைக்கிறார்கள். ஜாதி, மத, மொழிப்பிரிவினைகள் மலருக்குக் கிடையாது. ஆகையால் தங்கமழை பொழிவது போல் பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை மலர்களை அந்நிய தேசங்களும் ஆனந்தமாய்க் கொண்டாடுகின்றன. அதே உற்சாகத்துடன் சாலையோர மரங்களாகக் கூட வளர்க்கப்பட்டு பூமியெங்கும் மஞ்சள் படுகையாக விழுந்து கிடக்கும் சரக்கொன்றை மலர்களை கை நிறைய அள்ளி, மனம் நிறைய பிரார்த்தித்து சிவனுக்குச் சமர்ப்பித்து, மனோரஞ்சித மலரைப் பற்றி பேசுவோம்...