வேதிகை என்னும் தனது பக்தை சூல்கொண்ட காரணத்தால் உண்டாகிய சோர்வின் மிகுதியால், தன் வீட்டிற்கு விஜயம் செய்த முனிவரை சிறப்பாகக் கவனிக்க இயலாது போக, அவர் சினந்து சபித்து விட்டார். அந்தச் சாபத்தால் கருவுக்குச் சிதைவுண்டாகத் தொடங்கவே, அவள் தான் வணங்கும் உமையன்னையை மனம் உருகி வேண்டினாள். கணமும் தாமதியாமல் அந்தக் கருணை வடிவான தேவியானவள், அக்கரு சிதையுறா வண்ணம், ஒரு கும்பத்தில் அதை ஏந்தி, அதற்குப் பாதுகாப்பை அருளினாள் என்கிறது இக்கோயிலின் தலபுராணம்.
குழந்தையை பங்கமில்லாமல் பெற்ற அந்தப் பெண், தன்னைப் போலவே இங்கு வந்து வழிபடும் கர்பவதிகள் அனைவரும் இது போன்ற பாதுகாப்பினையும், மகிழ்வினையும் அடைய அருள் செய்யுமாறு அன்னையை வேண்டிட, அனந்த காலமாய் அவ்வாறே ’கர்ப்பரக்ஷாம்பிகை’ யாக இங்கே வீற்றிருக்கிறாள் அம்பிகை, லோக மாதா! அவள் பாதத்தில் வைத்து மந்திரித்த விளக்கெண்ணெயை பிரசவ வலியெடுத்த பின் வயிற்றில் தடவ, சுகமான, பாதுகாப்பான, பாதிப்பில்லாத, சிக்கல் எதுவும் இல்லாத பிரசவம் உறுதி- இது கல்ப காலமாய் நம்பிப் பலனடைந்த பக்தர்களின் அனுபவம்.