பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
மார்கழி மாதத்தை முதல் மாதம் என்று வைணவர்கள் சொல்வர். கண்ணனுடைய மற்றொரு பெயர் கேசவன். திருமாலின் பன்னிரண்டு பிறப்புப் பெயர்களில் முதலாவது பெயர் கேசவன். மார்கழி மாதத்து அதிபதியின் பெயரும் கேசவன். எனவே இது முதன்மையான மாதம் என்பர். பொதுவாக ஒருசிலர் மார்கழியை சூன்யமாதம், பீடை மாதம் என்றெல்லாம் சொல்வர். ஆனால், மார்கழி பீடு உடைய மாதம்-பெருமைக்குரிய மாதம். பீடு என்ற சொல்தான் பீடை என்று மருவிவிட்டது. இந்த மாதத்தில் அதிகாலை வேளையில் பெண்கள் வீட்டுவாயிலைத் தூய்மை செய்து, பசுஞ்சாணம் கரைத்த நீரினைத் தெளித்து அழகிய வண்ணக் கோலங்கள் போடுவார்கள். கோலம் என்பது ஒரு கலை மட்டுமல்ல; உடலுக்கு நல்ல பயிற்சியும் ஆகும். ஆன்மிகரீதியாகப் பார்த்தால், இரவு நேரங்களில் நடமாடும் துர்தேவதைகளின் தடயங்களைத் தண்ணீர் தெளிப்பதன் மூலம் அழித்து, வீட்டிற்குள் நல்ல தேவதைகளை வரவேற்கும் விதமாக கோலமிட வேண்டும் என்பர்.
அறிவியல்ரீதியாகப் பார்க்கும்பொழுது, பசுஞ்சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதால், குளிர்காலத்தில் உற்பத்தியாகும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிந்துவிடும். கோலம்போடுவது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வெகுவாகப் பாராட்டுகிறார்கள். இது இடது பக்க மூளைக்கு நல்ல பயிற்சியாகும். அதன்மூலம் வலப்பக்க மூளையும் இயக்கப்படுகிறது. நம் மூளையில் உள்ள பகுதிகள் பல்வேறு வேலைகளைச் செய்யும் திறன் வாய்ந்தவை. நினைவாற்றலையும் தக்க வைக்கக்கூடியவை. வயதான காலத்தில் மூளை சுருங்குவதால் மூளையி<<<லுள்ள செல்கள் அழியும் நிலை உண்டாகி ஞாபக மறதி ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட கோலம் போன்ற கலைகள் கை கொடுக்கின்றன. கோலம் போடும்போது நம் கவனம் அதிலேயே ஊன்றியிருப்பதால், மனம் ஒருநிலைப்படும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. அதிக புள்ளிகள் கொண்ட கோலம் போடுவதும் கற்பனை சக்தியைப் பயன்படுத்துவதும் மூளையின் செயல்பாட்டுக்கு சிறப்பான பயிற்சிகளாக அமைகின்றன.
அதிகாலை நேரத்தில் ஓசோன் எனப்படும் உயிர்காற்று நிறைந்திருக்கும். இது உடலுக்கும் மனதுக்கும் நன்மை செய்வதாகும். மார்கழி மாதத்தில் இது மேலும் அதிகமாக இருக்கும் என்கின்றனர்.
மேலும், குனிந்து நிமிர்ந்து புள்ளிகள் வைத்துக் கோலம் போடுவதால் இடுப்புக்கும் சிறந்த பயிற்சியாக அமைகிறது.
கையளவு பசுஞ்சாணத்தை உருண்டையாக்கி கோலத்தின் நடுவில் வைத்து அதன்மீது ஒரு பூவை வைத்து பிள்ளையாராக பாவித்து, பிள்ளையாரப்பா, எங்கள் வீடுகளில் தீயசக்திகள் நுழையாமல் காப்பாற்று என்று வேண்டிக் கொள்வதும் உண்டு. மாதம் முழுக்க வைத்த சாணத்தின் உருண்டைகளை சேகரித்து வைத்து, போகிப் பண்டிகையன்று ஆற்றில் கரைத்துவிடும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது. மார்கழியில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதால், இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்குமென்பது நம்பிக்கை.
கோலத்தின் நடுவில் பசுஞ்சாணத்தை வைத்து அதன் நடுவில் பறங்கி மலரை வைக்கும் வழக்கம் பாண்டவர்கள் காலத்தில் தோன்றியதாகச் சொல்கிறார்கள். பாரதப்போர் நடந்தது மார்கழி மாதத்தில்தான். பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர்வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார். அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடர்கிறது.
தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாகவும் அக்காலத்தில் இவ்வழக்கம் கையாளப்பட்டது. மார்கழியில் பறங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பர்.
மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று குருவாயூர் கோயிலில் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட குசேலர் வறுமையில் வாடினார். அப்போது அவர் மனைவி, உங்கள் நண்பரைப் பார்த்து நம் நிலையைச் சொல்லுங்கள் என்று வீட்டிலிருந்த சிறிதளவு அவலை எடுத்து குசேலரின் கிழிந்த அங்கவஸ்திரத்தில் முடிந்து அனுப்பினாள். குசேலர் கொண்டுசென்ற அவலை கண்ணன் <உண்டதும், குசேலரின் குடிசை வீடு பெரும் மாளிகையானது என்று புராணம் கூறுகிறது.