பால பருவத்தில் குறும்பு செய்தவராக, கோபிகையரோடு லீலை புரிந்தவராக, அன்னை யசோதையின் தண்டனைக்கு ஆட்பட்டவராக, கடவுளாக கண்ணனை பலரும் அறிந்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு சிறந்த ராஜ தந்திரியும்கூட! தர்மம் ஜெயிக்கவும், அதர்மம் அழியவும் நடந்த மகாபாரதப் போரில் பாண்டவர்களை வெற்றி பெற வைத்து கண்ணனின் ராஜதந்திரமே! பகவத் கீதையில் அவர் சொன்னது போல், கண்ணனின் அவதார நோக்கமே தர்மத்தை நிலை நிறுத்துவதுதான். குழந்தையாய் இருக்கும் போதே தான் செய்ய வேண்டிய மிகப் பெரிய காரியம் ஒன்று தனக்காக எதிர்காலத்தில் காத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் கம்சன் அழைப்பின் பேரில் அவர் அக்ரூரருடன் பிருந்தாவனத்தை விட்டு மதுரா நோக்கிச் செல்லும் போது, இனி தன்னால் ஒருக்காலும் விளையாட்டுப் பிள்ளையாய் இருக்க முடியாது என உணர்ந்து, அனைவரிடமும் பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.
இனி தன்னைத் தேடியோ, பிருந்தாவனத்தைத் தேடியோ கண்ணன் வர மாட்டான் என்று ராதைக்கு நன்றாகத் தெரியும். அவனை இந்தப் பரந்த உலகம் அழைக்கிறது. அவனது அவதார நோக்கம் நிறைவேற வேண்டுமானால் தன்னுடைய மற்றும் யசோதையுடைய அன்புச் சிறையை விடுத்து அவன் செல்ல வேண்டிய கட்டாயம். கடமையைத் தடுக்க நினைக்காத அந்த உத்தமப் பெண் ஒன்றே ஒன்றுதான் கேட்டாள். ”இனி நீ அரசியல் தலைவன், உன் மனதைக் கடினமாக்கிக் கொள்ள வேண்டும். அதனால் உள்ளத்தை இளகச் செய்யும் உன் வேணுகானம் இனி ஒலிக்கக்கூடாது. பிருந்தாவனத்தைத் தவிர நீ எங்குமே குழல் இசைக்கக் கூடாது” என சத்தியம் வாங்கிக் கொண்டாள். அன்று முதல் ஊமையானது அவன் புல்லாங்குழல்.
மகாபாரதப் போர் நடக்கும் முன் இருந்த இந்தியாவின் அரசியல் நிலை புரிந்தால்தான் கிருஷ்ணரின் ராஜ தந்திரங்ளை வியந்து பாராட்ட முடியும். அப்போது பாரதத்தில் மிகப் பெரிய அரசனாக இருந்தவன் ஜராசந்தன். ஹஸ்தினாபுர அரசன்கூட மகத நாட்டை ஆண்ட ஜராசந்தனுக்கு கப்பம் கட்டியாக வேண்டிய நிலை. அவனுடைய உற்ற நண்பனாக விளங்கியவர்கள் கம்சன் மற்றும் சிசுபாலன். சிசுபாலனின் நண்பன் விதர்ப்ப நாட்டு அரசன் ருக்மி. கம்சனை வதைத்து கிருஷ்ணர் அவனது தந்தையான சூரசேனரை மீண்டும் மன்னராக்கிய காரணத்தால் ஏற்கனவே சிசுபாலனுக்கும், ஜராசந்தனுக்கும் கண்ணன் மேல் ஆறாத பகை. இந்நிலையில் ருக்மணியைக் கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அவளுடைய அண்ணனான ருக்மியைப் போரில் தோற்கடித்தார் கண்ணபிரான். அதனால் ருக்மியினுடைய பகையை தேடிக்கொண்டார். அதுமட்டுமல்ல, ருக்மிணி ஏற்கனவே சிசுபாலனுக்கு என்று பேசப்பட்டவள். அந்த விவாகத்தை அவள் விரும்பாமல் கண்ணனையே மனதில் நினைத்துக் கொண்டு அவனை அடையக் கடிதம் எழுதினாள். அவளை மணந்ததால் சிசுபாலனுக்கு கிருஷ்ணர் வேண்டாதவராக ஆனார்.
ஜராசந்தனும் சிசுபாலனும் பகை முடிக்க நேரம் பார்த்திருந்தனர். மதுரா மீது பலமுறை படையெடுத்தான் ஜராசந்தன். பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது. அதைப் பற்றிக் கவலைப்படவில்லை அவன். ஆனால் கிருஷ்ணரால் அதைத் தாங்க முடியவில்லை. தன் மேல் உள்ள பகை காரணமாக அப்பாவி வீரர்களின் உயிர் போவதை அவர் விரும்பவில்லை. அதனால் மேற்கு நோக்கி பயணம் செய்து தங்களுக்கென தனியாக ஒரு ராஜ்யத்தை துவாரகையில் ஏற்படுத்தினார். அதனால் ஜராசந்தனிடம் தோற்றவன் என்ற பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டது அவரது கருணை உள்ளம். ஜராசந்தன் பிழை ஒன்றும் செய்யாமல் இருந்த போது அவனை அழிக்க அவரது மனம் ஒப்பவில்லை. நினைத்திருந்தால் கம்சனை அழித்ததுபோல அவனையும் அழித்திருக்க முடியும். ஆனால் ஜராசந்தன் ஒரு யாகம் மேற்கொண்டான். அதன்படி நூறு மன்னர்களின் தலையை பலி கொடுத்து அமரனாக எண்ணினான். இது தர்மத்துக்கு புறம்பான செயல். அப்போதும்கூட கிருஷ்ணர் அவனோடு போர் தொடுக்கவில்லை.
மாறாக பாண்டவர்களில் அர்ஜுனனையும், பீமனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு, மாறுவேடத்தில் ஜராசந்தனை சந்திக்கச் சென்றார். மூவரில் அவன் யாருடன் போரிட்டாலும் அவன் மாய்வான் என்பது அவரது கணக்கு அவர்கள் சென்று ’எங்களில் ஒருவனோடு யுத்தம் செய்து நீ ஜெயித்து விட்டால் எங்கள் மூவரையுமே நீ பலி கொடுக்கலாம்’ எனக் கூறி நின்றனர்
இது போன்ற சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது என உணர்ந்த ஜராசந்தனும் அவர்களில் இருப்பதிலேயே பலசாலியான பீமனோடு மோத ஒப்புக் கொண்டான் மல்யுத்தம் தொடங்கியது. கடுமையான போர் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. ஆனால் பீமன் ஒரு கட்டத்தில் ஜராசந்தனின் உடலை இரண்டு துண்டாகக் கிழித்துப் போட அவை மீண்டும் ஒன்று கூடியது. இவ்வாறு மூன்று முறை நிகழ பீமன் செய்வதறியாமல் கிருஷ்ணரைப் பார்த்தான்.
மாயக்கண்ணன் அவன் எதிரில் ஒரு தர்ப்பையை இரண்டாக் கிழித்து கால்மாற்றிப் போட குறிப்பறிந்து கொண்ட பீமன், ஜராசந்தனின் உடலை இரண்டாகப் பிளந்து கால் மாற்றிப் போட்டான். அதோடு அவன் கதை முடிந்தது. ஜராசந்தன் இரு துண்டுகளாகப் பிறந்தவன். அவ்வாறு பிறந்த அவனைத் தூக்கி எறிந்து விட்டார்கள். அப்போது ஜரா என்ற அரக்கி அந்த உடலை தின்ன எண்ணி ஒன்று சேர்த்த போது குழந்தை உயிர் பெற்று வீறிட்டு அலறியது. அதனால்தான் அவனுக்கு ஜராசந்தன் என்று பெயர். அவன் உடலைப் பிளந்தால் அது ஒன்று சேர்ந்து விடும் என்ற உண்மை கிருஷ்ணருக்குத் தெரியும்.
அந்த உண்மை அர்ஜுனனுக்கும் தெரியும். ஆனால் இவ்வாறு கால் மாற்றிப் போட்டால் அவன் இறந்து விடுவான் என்பது அவனுக்குத் தோன்றவில்லை. கண்ணனின் தந்திர மூளையில்தான் அது உதித்தது. கீதையில் கண்ணன் சொல்வது போல உலகில் வெற்றி பெற ஞானம் வேண்டும். ஆனால் வெறும் ஞானம் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். அப்போதுதான் வெற்றித் திருமகள் நம்மைத் தேடிவருவாள். கண்ணன் தன்னுடைய ஞானத்தை மிக அழகாகப் பயன்படுத்தி தேவையில்லாத உயிர்ச் சேதம் இன்றி ஜராசந்தனை அழித்தார்.
அடுத்து சிசுபாலன் அவனும் நேரிடையாக எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவனையும் அவர் ஒன்றும் செய்யவில்லை. அவர் நினைத்திருந்தால் மிக எளிதாக எப்போதோ அவனது கதையை முடித்திருக்கலாம். ஆனால் தான் சொல்லப்போகும் தர்ம நியாயங்களைத் தானே அனுஷ்டிக்காவிட்டால் மக்கள் கேட்க மாட்டார்கள் என்ற தீர்க்க தரிசனத்தால் காலம் வரும் வரை காத்திருந்தார். ஆனால் அதற்காக அவர் வெறுமே கையைக் கட்டிக் கொண்டு இருக்கவில்லை.
தர்மரைக் கொண்டு ராஜசூய யாகம் செய்ய வைத்தார். அது ஒரு மிகப் பெரிய யாகம். அதை நிறைவு செய்யும் அன்று மதிப்பிற்குரிய ஒருவருக்கு முதல் மரியாதை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு மரியாதை செய்யப்படும். நபரை மற்றவர்களும் வணங்க வேண்டும் என்பது நியதி. தான் பாண்டவர்களுக்கு செய்த உதவிகளுக்கு நன்றியாக தன்னையேதான் அவர்கள் முதல் மரியாதைக்குரியவனாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கண்ணனுக்கு நன்றாகத் தெரியும்.
மற்ற பெரியவர்களால் பிரச்னை வராதிருக்கும் பொருட்டு விதுரர் மூலமாக தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரந்தாமன். அதனால் யாருக்கு முதல் மரியாதை என்ற பேச்சு வரும் போது பீஷ்மர் உள்ளிட்ட பெரியோர்கள் கண்ணன் பெயரையே முன் மொழிய தருமர் அதை வழி மொழிந்தார். அதன்படியே அவருக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் முதலில் தருமர், சிசுபாலனை இந்த வைபவத்திற்கு அழைக்க இஷ்டப்படவேயில்லை.
ஆனால் கிருஷ்ணர் தான் வற்புறுத்தி அவனை அழைக்கச் செய்தார். அவன் வந்தால்தானே இவரது நோக்கம் நிறைவேறும்? ஜராசந்தனை கண்ணன் கபடத்தால் வென்று விட்டதாக சொல்லித் திரிந்து கொண்டிருக்கும் சிசுபாலன் வருவான். அவனுக்கு தனக்குச் செய்யும் முதல் மரியாதை கண்டிப்பாகப் பிடிக்காது. அப்போது அவமதித்துப் பேசுவான். அப்போது அவன் தவறு செய்தவனாவான். அவனை அழிப்பது எளிது என்பது அவரது தந்திரம். அதன்படியே சிசுபாலன் கண்ணனைக் கண்டபடி பேசினான். மிகவும் அவமதித்தான்.
அப்போதும் கிருஷ்ணர் அவனை ஒன்றும் செய்யவில்லை. முதல் மரியாதைக்குரியவரை இவ்வாறு பேசுதல் தவறு என்று அர்ஜுனன் கொதித்து எழுந்த போதுகூட அவனை அடக்கி விட்டார். ஏன் அப்படிச் செய்தார்? காரணம் சிசுபாலனின் தாய்க்கு அவர் கொடுத்த வாக்குறுதி. சிசுபாலனின் தாய் கண்ணனுக்கு அத்தை முறை அவன் பிறந்த போது நான்கு கைகளுடன் பிறந்தான். யார் அவனை மடியில் வைத்துக் கொள்ளும் போது அவனது தேவையற்ற இரு கரங்கள் உதிர்ந்து விழுகின்றனவோ அவரால்தான் அவனுக்கு சாவு என்று அசரீரி வாக்குச் சொன்னது.
குழந்தையைப்பார்க்க கிருஷ்ணர், அண்ணன் பலராமருடன் வந்தார். அப்போது அவரும் சிறுவர் தான். அவர் மடியில் குழந்தை வந்ததும் தேவையற்ற இரு கைகள் உதிர்ந்தன. அதைக் கண்ட அவன் தாய், ”கண்ணா! கடைசியில் நீ தான் என் மகனுக்கு எமன்? நீ அவனை மன்னிக்கலாகாதா?” என்று வேண்டினாள். ”அத்தை ! விதி இவ்வாறிருந்தால் நான் என்ன செய்யமுடியும்?” எனக் கேட்க, அதற்கு அந்தத் தாய், ”அப்படியானால் நீ என் மகன் செய்யும் நூறு தவறுகளை மன்னிக்க வேண்டும். அது வரை நீ அவனை ஒன்றும் செய்யக்கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்டாள்.
அன்று தன் அத்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அவனது தவறகளை எண்ணிக் கொண்டு வந்தார். நூறு தவறு முடிந்து நூற்று ஒன்றானது. அது வரை பொறுமையாய் இருந்த கிருஷ்ணர், சீறி எழுந்து தன் சக்கரயுகத்தை எடுத்து அவனை நோக்கி எறிய, அது அவனது தலையைக் கொய்து விட்டு ஜனார்த்தனன் கைக்குத் திரும்பியது. அவன் பொறுக்கவே முடியாத தவறுகளைச் செய்த போதும் தான் கொடுத்த வாக்கை மறக்காமல் காப்பாற்றி அதே சமயம் கெட்ட நோக்கமுடைய அவனையும் அழித்தார்.
இவ்வாறு ஜராசந்தன், சிசுபாலனை அவர் அழித்தற்கும் உள் நோக்கம் இல்லாமல் இல்லை. பின்னால் கௌரவ பாண்டவ யுத்தம் வந்தே தீரும் என்பதை அவர் நன்கு அறிவார். அப்போது இந்த இருவரும் உயிருடன் இருந்தால் நிச்சயம் கௌரவர்கள் பக்கம்தான் நிற்பார்கள். அதனால் பாண்டவர்கள் பக்கம் மேலும் வலுவிழக்கும். போர்க்களத்தில் புகுந்து விட்டால் ஜராசந்தன், சிசுபாலன் இருவருமே நிகரற்ற வீரர்கள். அவர்களது வீரத்தின் முன் பாண்டவர்கள் தாக்குப் பிடிப்பது கடினம். தானோ ஆயுதம் எதையும் ஏந்தப் போவதில்லை அதனால்தான் போருக்கு முன்பாகவே இருவரையும் வதைத்து விட்டார்.
பாண்டவர்கள் கிருஷ்ணரைக் கலந்து கொள்ளாமல் சூதாடி அனைத்தையும் தோற்று நாடு விட்டு கானகம் சென்று அஞ்ஞாத வாசமும் புரிந்து மீண்டும் அஸ்தினாபுரம் அடைந்தனர். முன்னால் சொன்ன வாக்குப்படி துரியோதனன் நாட்டை தருமருக்குத் திருப்பிக் கொடுக்க மறுத்தான் அந்தக் கயவன். அவர்களை மீண்டும் காட்டுக்கே செல்லும்படி கூறினான்.
அப்போதுதான் மீண்டும் கிருஷ்ணரின் நினைவு தருமருக்குத் தோன்றியது. தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்க வேண்டி ஓடோடியும் வருவது கண்ணனின் இயல்பல்லவா! அதுவும் கூப்பிடுவது அவருடைய நெருங்கிய நண்பனும் பக்தனுமான அர்ஜுனனின் அண்ணன். வராமல் இருப்பாரா? துவாரகையிலிருந்து வந்து சேர்ந்தார். யுத்ததைத் தவிர்க்க முடியாது என அவருக்குத் தெரியும். ஆனால் பின்னால் வரப்போகும் சந்ததியினர், கண்ணன் யுத்தத்தைத் தவிர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை எனக் கூறிவிடக் கூடாது என்பதற்காக தானே தூதுவனாகப் போனார்.
அங்கு திருதராஷ்டிரரின் அரண்மனையிலோ, துரியோதனனின் அரண்மனையிலோ தங்காமல் விதுரரின் எளிய குடிலில் தங்கினார். அதனால் விதுரர் மீது துரியோதனனுக்கு அவநம்பிக்கை உண்டாயிற்று. துரியோதனின் கடும் சொற்களால் வருத்தமடைந்த விதுரர், அவனுக்கு இனி தான் எந்த அறிவுரையும் சொல்லப் போவது இல்லை. யுத்தம் வந்தால்தான் ஆயுதம் ஏந்திப் போர் செய்யப் போவதும் இல்லை என்று சூளுரைத்தார்.
விதுரரின் அறிவாற்றல் மேல் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தார் கண்ணன். அவர் நடுநிலையானவர்தான். ஆனால் அஸ்தினாபுரத்திற்குக் கடமைப்பட்டவர். அதனால் யுத்தம் வந்தால் கண்டிப்பாக பீஷ்மரைப் போல அவரும் கௌரவர் பக்கமே நிற்பார். அதோடு யுத்த தந்திரங்களில் தேர்ந்தவரான அவர் கூறிய அறிவுரைகளை துரியோதனன் கேட்டு நடந்து கொண்டால் பாண்டவர்கள் தோற்க வேண்டி வரலாம் என கண்ணன் மனம் யோசித்தது. அதனால்தான் விதுரரை யுத்தத்திலிருந்து விலக்கி வைக்க அவரது வீட்டில் தங்கினார். அவரது அந்த அரசியல் தந்திரமும் பலித்தது.
சமாதானத் தூது எடுபடவில்லை. ஐந்து வீடுகள் இல்லை. ஊசி முனை அளவு இடம் கூடக் கொடுக்க மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான் துரியோதனன். பீஷ்மர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. ”பாண்டவர்கள் க்ஷத்திரியர்கள் தானா? ஏன் இப்படிக் கோழைகள் போல பிச்சை கேட்கிறார்கள்? தைரியம் இருந்தால் மோதிப் பார்க்க வேண்டியதுதானே? என்னோடு போரிட்டு வெற்றி பெற்றால் இந்திரப் பிரஸ்தம் மட்டும் என்ன? அஸ்தினாபுரத்தையே எடுத்துக் கொள்ளட்டுமே?” எனக் கிண்டல் செய்தான் துரியோதனன்.
இனி வேறு வழியில்லை. சமாதானத்திற்கான கதவுகள் எல்லாம் அடைபட்டு விட்டன. யுத்தம் ஒன்றுதான் வழி என முடிவானது. பாரத வர்ஷமே இரு அணிகளில் திரண்டது. மொத்தம் 56 தேச ராஜாக்களில் முக்கால்வாசிப் பேர் கௌரவர் பக்கம் இருந்தனர். பாண்டியர்கள் போல ஒரு சிலர் எந்தப் பக்கமும் சேராமல் நடு நிலையாக இருக்க முடிவு செய்து கொண்டனர். கௌரவர்கள் பக்கம் அக்ஷௌகிணி எனச் சொல்லப்படுகின்ற கோடிக்கணக்கான படை வீரர்கள் இருந்தனர். ஆனால் பாண்டவர் வசமோ சில கோடிகள் மட்டுமே இருந்தனர்.
இந்நிலையில் சகுனியின் யோசனைப்படி கண்ணனை தன் வசம் இழுக்கச் சென்றான் துரியோதனன். அதே நேரம் அர்ஜுனனையும் அங்கு வருமாறு செய்தார் கண்ணன். இருவரையும் ஒரே நேரத்தில் கண்ட கண்ணன், ”நான் நடு நிலையானவனாக இருக்கிறேன். ஒரு புறம் என்னுடைய மூன்று அக்ஷௌகிணி சேனைகள், மற்றொரு புறம் ஆயுதத்தையே எடுக்காத நான். இந்த இரண்டில் உனக்கு எது வேண்டும் அர்ஜுனா? நீ இளையவனாக இருப்பதால் உன்னை முதலில் கேட்கிறேன்” என்றார்.
அர்ஜுனன் கொஞ்சம் கூட யோசிக்காமல், ”கண்ணா! எனக்கு நீயன்றி வேறே யார்? அதனால் நீ ஒருவன் மட்டும் எனக்குப் போதும். அதிலும் நீபோரில் எனக்கு சாரதியாக பார்த்தசாரதியாக விளங்கி என்னை வழி நடத்தினால் போதும்.” என்று கேட்டுக் கொண்டான். அதைக் கவனித்துக் கொண்டிருந்த துரியோதனின் உள்ளம் துள்ளியது. ”ஆஹா! இந்த அர்ஜுனன் சரியான மடையன். மூன்று அக்ஷௌகிணி சேனையை விடுத்து ஆயுதம் ஏந்திப் போரிடாத கிருஷ்ணனைப் போய்க் கேட்டிருக்கிறானே? நல்லவேளை நமக்கு சேனை கிடைத்தது” என அகமகிழ்ந்தான்.
இந்த இடத்தில்தான் நாம் கண்ணனின் தந்திரத்தைக் கவனிக்க வேண்டும். ஏன் அவர் அர்ஜுனனை வரச் சொல்ல வேண்டும்? கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் வந்தது போல தருமர் வர வேண்டும். ஆனால் ஏன் அவர் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார்? பீமனையோ, தருமரையோ அழைத்து முதலில் கேட்டிருந்தால், அவர்கள் துரியோதனனைப் போல அவரது சேனையைக் கேட்டிருக்கலாம். ஆனால் அர்ஜுனன் அப்படி அல்ல. அவனுக்கு கண்ணபிரானைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. அவனைக் கூப்பிட்டால்தான் தன்னைத் தேர்வு செய்வான் என்ற அவரது தந்திரம் பலித்தது.
கண்ணனுக்கு அடுத்து கவலை அளித்த நபர் பீஷ்மர். அவரது வீரமும் நடுநிலையும் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவரோ அஸ்தினாபுர சிம்மாசனத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கே கட்டுப்பட்டவர். அதனால் அவரை பாண்டவர் பக்கம் சேர்க்கவே முடியாது. அவர் போரிட ஆரம்பித்தால் முன்னால் நிற்பவர் யாரென்று பார்க்க மாட்டார். எதிரியை அழிப்பது ஒன்றே அவர் குறி. அவரால் பாண்டவர்களுக்கு ஆபத்து நேருமோ என அச்சப்பட்ட கண்ணன் ஒரு தந்திரம் செய்தார்.
பீஷ்மர் தினமும் அதிகாலை தன் தாயான கங்கையை வணங்கி விட்டுத் திரும்பும் போது யார் வந்து வணங்கினாலும் ஆசிர்வாதம் செய்வார். அதைத் தெரிந்து கொண்ட கிருஷ்ணர், திரௌபதியை அழைத்துக் கொண்டு அந்த விடியற்காலைப் பொழுதில் கங்கைக்கரையை அடைந்தார். நிசப்தமான அந்தக் காலைப் பொழுதில் பாண்டவர்களின் பட்டத்து ராணியான பாஞ்சாலி காலில் செருப்பு அணிந்து நடந்தாள். அந்தச் சத்தம் துல்லியமாகக் கேட்டது. அதைக் கேட்ட கண்ணன் அந்தச் செருப்புகளை கழற்றச் சொல்லி தன் கைகளில் வாங்கிக் கொண்டார். பின்னர் பாஞ்சாலியை அழைத்து தான் சொன்னபடி செய்யச் சொன்னார். பாஞ்சாலியும் ஒப்புக் கொண்டாள்.
செருப்பில்லாமல் அவள் நடந்த போது அவளது கால் கொலுசின் ஓசை நன்கு கேட்டது. பெண்கள் யாரையும் ஏறிட்டும் பார்க்காத நைஷ்டிக பிரம்மச்சாரியான பீஷ்மர், வருவது ஒரு சுமங்கலி என ஊகித்துக் கொண்டார். திரௌபதியும் முகத்தை தன் புடவைத் தலைப்பால் நன்கு மறைத்துக் கொண்டு அவரது காலில் விழுந்தாள். அவரும் யாரோ சுமங்கலி தெரியவில்லை. நம் காலில் விழுகிறாள். ஆசிர்வாதம் செய்வோம் என்று ”தீர்க்க சுமங்கலி பவ.” என்று ஆசிர்வாதம் செய்தார். அவ்வாறு அவள் ஐந்து முறை பீஷ்மரது காலில் விழ, அவரும் ஐந்து முறை தீர்க்க சுமங்கலியாக வாழ ஆசிர்வாதம் செய்தார்.
அதுவரை அவளது செருப்பை பொறுமையாகக் கைகளில் ஏந்தி நின்றிருந்தான் பரந்தாமன். பின்னர் பீஷ்மரது முன்னால் வந்து திரௌபதியை வெளிப்படுத்தினார். ”ஐயா! நீங்கள் செய்த ஆசிர்வாதம் மெய்ப்பதும் பொய்ப்பதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது” என்று கூற, அதைப் புரிந்து கொண்ட பீஷ்மர், ”கண்ணா! செய்த ஆசிர்வாதம் செய்ததுதான். நடக்க இருக்கும் போரில் நான் பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன். அதனால் பாஞ்சாலி தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்” என்றார்.
பீஷ்மரிடம் சென்று கண்ணன் திரௌபதியை ஆசிர்வாதம் வாங்கச் செய்திராவிட்டால் போரில் அவர் நிச்சயம் அர்ஜுனனை அழித்திருப்பார். பிறகு எங்கே பாண்டவர்கள் வெற்றி பெறுவது? தன்னை நம்பிய பக்தனுக்கு வெற்றியைத் தேடித்தர அவனது மனைவியின் செருப்பைக்கூட சுமக்கத் தயங்கவில்லை அந்தக் கருணாமூர்த்தி.
கர்ணனை பாண்டவர்களோடு சேர்த்துவிட வேண்டும் என்ற கண்ணனின் முயற்சி மட்டும் பலிக்கவில்லை. அவன் செய் நன்றி மறக்க முடியாது. அதனால் நான் அதர்மம் என்று தெரிந்தும் துரியோதனனோடுதான் இருப்பேன் என்று சொல்லி விட்டான். அவன் அவ்வாறு சொல்வான் என்று எதிர்பார்த்த கிருஷ்ணர், அவனை நோக்கி தன்னுடைய மற்றொரு ஆயுதத்தைத் தொடுத்தார். கர்ணனின் தாய் குந்திதான் என்ற உண்மை அவனுக்குத் தெரிய வேண்டும். அதோடு அவன் அர்ஜுனைத் தவிர வேறு எந்த சகோதரனையும் அழிக்கக்கூடாது.
இதைச் செயல்படுத்த குந்தியின் உதவியை நாடினார். அவர் கூறியபடி குந்தி கர்ணணைக் கண்டு, ”நான்தான் உன் தாய்” என்றாள். அது உண்மை என உணர்ந்து கொண்ட கர்ணன், ”அம்மா! நீ இத்தனை நாள் இல்லாமல் என்னை நாடி வந்திருக்கிறாய் என்றால் ஏதேனும் காரணம் இல்லாமல் போகாது. சொல், உனக்கு என்ன வேண்டும்?” என்றான். அவளும் கர்ணனை பாண்டவர்களோடு சேரும்படி எவ்வளவோ கெஞ்சினாள். ஆனால் அவன் உறுதியாக மறுத்து விட்டான்.
”கர்ணா! அப்போது நீ எனக்கு இரு வரங்கள் தர வேண்டும். அர்ஜுனனைத் தவிர நீ உன் வேறு எந்தத் தம்பியையும் கொல்லக்கூடாது. இது முதல் வரம். இரண்டாவது வரம் சூரியபகவான் அருளிய நாகாஸ்திரத்தை நீ ஒரு முறைக்கு மேல் பிரயோகிக்கக்கூடாது. எனக்கு இந்த வரங்களைத் தருவாயா மகனே?” என இறைஞ்சினாள். தானத்துக்குப் பெயர் போன கர்ணன் தாய் கேட்டு மறுப்பானா? உடனே கொடுத்து விட்டான்.
போர்க்களத்தில் குந்தி தேவி, கர்ணன் இறந்த பின் அவன் உடலைக் கட்டிக் கொண்டு, ”மகனே! மகனே!” எனக் கதறி அழுதபோதுதானே அவர்களுக்கு விஷயம் தெரிந்தது. ஏன் கர்ணன் பாண்டவர்களின் அண்ணன் என்ற உண்மையை கிருஷ்ணர் அவர்களிடம் முன்னரே சொல்லவில்லை?
அவ்வாறு கண்ணபிரான் செய்திருந்தால் தருமர் உள்ளிட்ட பாண்டவர்கள் கர்ணனைக் கண்டு வணங்கி, இனி நீயே எங்களுக்கு அண்ணன். நீ சொல்வதே எங்களுக்கு வேதம் எனக் கூறியிருப்பார்கள். துரியோதனன் பால் மாறாத நன்றிக்கடன் பட்ட அவனும் நீங்கள் மீண்டும் காட்டுக்குப் போங்கள். துரியோதனனே நாட்டை ஆளட்டும் என்று சொல்லியிருப்பான். பாண்டவர்களும் அந்த வாக்கை மதித்து உடனே கானகம் சென்றிருப்பர். அவ்வாறு நடப்பது தர்மத்திற்கு எதிரானது. அதனாலேயேதான் கிருஷ்ணர், கர்ணனின் பிறப்பு ரகசியத்தை வேறு யாரிடமும் சொல்லவில்லை.
யுத்தம் மூண்டது. பாண்டவர்களின் அணியில் படை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தன்னுடைய பிரசன்னத்தாலும், அவர்களுக்கு தான் வாங்கிக் கொடுத்த வரங்களாலும், ஆசிர்வதங்களாலும் அவர்களைக் காத்தான் புருஷோத்தமன். பின்னர் போரின் போது அஸ்வத்தாமா என்ற யானை இறந்ததை மாற்றி சொல்லச் சொல்லி துரோணரை வென்றதும், கர்ணன் நாகாஸ்திரத்தைக் குறி வைத்த போது தேரை அழுத்தி அதை அவனது தலைக் கிரீடத்தோடு போகச் செய்ததும், கடைசி நேரத்தில் கர்ணனின் புண்ணிய பலன்களை தானமாப் பெற்று அவனை வென்றதும் நமக்கெல்லாம் தெரிந்ததே!
பக்தர்களைக் காக்க அவர்களது வாழ்க்கையில் அவர்கள் வெற்றிபெற என்னென்ன வழிகளைக் கையாள வேண்டும்? யார் யாரோடு கூட்டு சேர வேண்டும்? என நம் வாழ்வில் தோன்றும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் நமக்கு வழிகாட்ட பகவத் கீதை அருளிச் செய்திருக்கிறார் கண்ணபிரான். அதைப் படிக்கும் பல வெளிநாட்டவர், எப்படி அந்த நாளிலேயே சுமார் மூவாயிரம் இல்லை நாலாயிரம் வருடத்துக்கு முன்னால் சொன்ன அந்த வாக்கியங்கள் இன்றைய மேலாண்மைத் தந்திரங்களை ஒத்திருக்கிறது என வியந்து போகிறார்கள்.
நம்முடைய இன்றைய வாழ்க்கைப் போராட்டங்கள், நம்முடைய பல சிக்கலான பிரச்சனைகள் என எல்லாவற்றிற்கும் வழிகாட்டுகிறது கீதை. அதனால் நாம் அனைவரும் கீதையைப் படித்து பொருள் அறிந்து நம்முடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் பக்தவத்சலன், தீன தயாளன் கண்ணன் தன்னை நம்பிய பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வார். அர்ஜுனன் போல நாமும் கண்ணனையே நம் வாழ்க்கை என்னும் தேரைச் செலுத்தும் சாரதியாக்கி விட்டு நிம்மதியான வாழ்வைப் பெறுவோம்!