பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
கிருஷ்ண சரிதம் அனைவரையும் மயங்க வைத்த அற்புதம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கிருஷ்ண லீலா அமிர்தத்தை அனுபவித்திருக்கிறார்கள். இதோ... லீலாசுகரின் கிருஷ்ண கர்ணாம்ருதத்திலிருந்து சில காட்சிகள்... தயிர்ப்பானையில் தயிரைக் கொண்டுசென்று விற்கும் ஒரு கோபிகை.
”தயிரோ தயிர் என்று விற்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால்... உள்ளமோ ஸ்ரீகிருஷ்ணனின் பாதார விந்தங்களையே சதா நினைத்துக்கொண்டு இருக்கிறது. அதனால் தன்னை மறந்து,, தன் நிலை அற்றவளாக அவள் விற்கும் பொருட்களைக் குறித்துக் கூறாமல், ’கோவிந்தா, தாமோதரா, மாதவா’ என்று கூறிக்கொண்டு செல்கிறாளாம்!
விக்ரே து காமா கில கோபகன்யா
முராரி பாதார்ப்பித சித்தவ்ருத்தி
தத்யாதிகம் மோஹ வசாதவோசத்
கோவிந்த தாமோதர மாததேவி
இன்னொரு பாவத்திலும் இதைப் பார்க்கலாம். ’பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் கண்ணனே!’ என்று பிரபந்தம் கூறுவது நினைவுக்கு வருகிறதா?
தன்னுடைய கைகளிலிருந்து தப்பிச் சென்றுவிட்ட கண்ணனைப் பார்த்து இன்னொரு கோபிகை செல்கிறாள்:
ஹஸ்தம் ஆக்ஷிப்ய யாதோஸி
பலாத் கிருஷ்ண கிமத்புதம்?
ஹருதயாத் யதிநிர்யாஸி
பௌருஷம் கணயாமிதே
’நீ எனது ஆலிங்கனத்திலிருந்து (கைகளிலிருந்து) உன் பலத்தை உபயோகித்து விடுபட்டு தப்பிச் சென்றுவிட்டாய். ஆனால், அதில் என்ன அதிசயம் இருக்கிறது? என் உள்ளச் சிறையில் இருந்து மீண்டு செல் பார்ப்போம்! அப்போது உன் ஆன்மையைப் புகழ்வேன்! ’தன் மனத்தை விட்டு அவளை மீளவிட மாட்டேன்’ என்கிற திடபக்தியும் வசீகரம் அல்லவா?” யசோதைக்குத் தினமும் தன் அதிசயமான குழந்தையைப் பற்றிக் கோபிகைகள் புகார் சொல்வதைக் கேட்பது பழக்கமானதுதான். அதாவது, அத்தெய்வீகக் குழந்தை வெண்ணெய் திருடினான்; தயிரைத் திருடினான்; கன்றுகளை அவிழ்த்துவிட்டான்- இது போலப் பல புகார்கள்.
இதோ ஒரு கோபியின் வீட்டில் நடக்கிறது இந்தக் காட்சி:
கஸ்த்வம்பால? பாலானுஜ; கிமிஹதே?
மன்மந்திராச ங்கயா யுக்தம் தத்
நவநீத பாத்ரலிவரே ஹஸ்தம் கிமர்த்தன்யஸே?
மாத கஞ்சன வத்ஸகம் ம்ருகயிதும்
மா கா விபுலதம் க்ஷணாத்
இத்யேவம் வரவல்லவீ ப்ரதிவச கிருஷ்ணஸ்ய
புஷ்ணாது ந:
குழந்தாய்! நீ யார்? நான் பலராமனின் இளைய சகோதரன். நீ எங்கு வந்தாய்? என் வீடு என்று நினைத்து வந்துவிட்டேன். சரி. உன் கைகள் ஏன் வெண்ணெய்ப் பாத்திரத்தில் உள்ளன? தாயே! நான் காணாமற்போன கன்றைத் தேடி வந்தேன். ஆனால், நீ அதற்காகக் கவலைப்பட வேண்டாம்!
இப்படிப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் நம்மைக் காப்பாராக!
வெண்ணெய் பாத்திரத்தில் கன்றுக்குட்டியைத் தேடுவது இந்த கோபாலனால் மட்டுமே முடியும் என தோன்றுகிறதல்லவா? இதோ யசோதையிடம் கிருஷ்ணன் கேட்பதையும்தான் கவனிப்போமே!
அம்மா!
என்னடா கண்ணா?
எனக்குக் குவளையைக் கொடு.
எதற்காக?
பால் குடிக்க வேண்டும்.
இப்போது முடியாது.
பிறகு எப்போது?
இரவில்தான்.
இரவு என்றால் என்ன?
இருட்டுவதுதான் இரவு.
கிருஷ்ணன் கண்களை மூடிக் கொண்டான். ’இப்போது இருட்டாகி விட்டது பாலைக்கொடு’ என்று சொல்லிக்கொண்டே தன் தாயின் சேலை முந்தானையை இழுத்து விளையாடும் ஸ்ரீகிருஷ்ணர் நம்மைக் காப்பாராக!
காளிந்தீ புலினோதரேஷு
முஸலீயாவத் கீதகேலிதும்...
பாபன்ன ஸ்வசிகாம் ஸ்ப்ருசன்
ப்ரமுதித ! க்ஷேத்ரோத் பிதேஹரி
யமுனை ஆற்று மணலில் விளையாடச் சென்றுள்ள பலராமன் திரும்பி வருமுன் நீ இந்தப் பாலைக் குடித்துவிட்டால், உன் தலைமுடி நன்றாக வளரும் என்று (தாய் யசோதை) கூறவே, பாதி பாலைக் குடித்துவிட்டு தன் தலைமுடி வளர்ந்து விட்டதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டானாம் அவன். அந்த பாலகிருஷ்ணன் என்னை ரட்சிப்பானாக! பாகவதத்தில் வியாசர் கூறிய லீலா விநோதங்கள் பல. அதில் இடம்பெறாத பலப் பல அனுபவங்களை, லீலாசுகர், பூந்தானம், நாராயண பட்டத்திரி, ஜயதேவர்... இப்படிப் பலரும் அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். லீலைகளாலே மயக்கிய கிருஷ்ணனை, அவன் லீலைகளை நினைத்து நினைத்து மனம் குளிர்வோம்.