பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ!
ஓம் சக்தி! ஓம் சக்தி!! ஓம் சக்தி!!!
கன்யாகுப்ஜம் என்ற நகரத்துக்கு வந்து சேர்ந்தனர் நாரதரும் மகாவிஷ்ணுவும். அன்னை மகாசக்தியின் பெருமையை நாரதர்க்கு விளக்கவும், உலகத்தோர்க்கு அறியப்படுத்தவும் நாராயணன் விரும்பினார். இருவரும் ஒரு குளத்தை அடைந்தனர். குளத்தில் ஏராளமாக தாமரை மலர்களும், அல்லி ஆம்பல் மலர்களும் பூத்திருந்தன. பல விதமான பறவைகளின் ஒலி அந்த இடத்தையே ரம்மியமாக்கிற்று. மகாவிஷ்ணு நாரதரிடம், நாரதா, சாதுக்களின் மனம்போல் நிர்மலமாக உள்ள இந்தத் தடாகத்தில் நாம் குளித்து விட்டு இந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்கலாம். நீ முதலில் ஸ்நானம் செய்து விட்டு வா! நான் கரையினில் இருக்கிறேன். ஏனெனில் உன் வீணைக்கும், துளசி மாலைக்கும் காவல் வேண்டுமல்லவா! நீ விரைவில் சென்று குளித்து வா! என்றார். நாரதரும் அவ்வாறே அந்தக் குளத்தில் வீணையையும், மாலையும் கரையில் வைத்துவிட்டு, பின் மூழ்கி எழுந்தார். எழுந்தார் நாரதர் நீரிலிருந்து! ஆனால் என்ன ஆச்சர்யம்! தன்னை உற்றுப் பார்த்த நாரதர் திடுக்கிட்டார். என்ன என் தோல் இவ்வளவு மிருதுவாக உள்ளதே! என் ஆடைகளும், மங்கையர்க்குரிய ஆடைகளைப் போல் உள்ளதே! என் உடலை இவ்வளவு தங்க நகைகள் அணி செய்கின்றனவே! என் உடல் பெண்மை நளினமாக இருக்கிறதே! நான் என்ன பெண்ணாக மாறி விட்டேனா என்ன! என்று தெளிந்து இருக்கும் குளத்து நீரில் தன் உருவத்தைப் பார்த்து வியந்து நின்றார்!
ஆம், நாரதர் இப்பொழுது பெண்ணாக மாறியிருந்தார்! முற்றிலும் ஆண் தன்மை மாறிவிட்டது! நளினம் மிகுந்த பேரழகுடைய தேவலோக மங்கை போல ஒளி பொருந்திய அழகியாக மாறிவிட்டார். பெண்மைக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். தன்முன்பிறவியை நினைக்கவில்லை. நாரதராகத் தான் இருந்ததையும் மறந்தார்! தான் ஓர் ஆண்மகனாக இருந்ததும், தேவலோக வாசி, திரிலோக சஞ்சாரி என்பதனையும் மறந்து, புத்தம் புது பிறவியெடுத்து அழகிய மங்கையாக பதுமை போல மாறியிருந்தார் நாரதர்! ஆம், நாரதர் நாரதியாக மாறியிருந்தார். விஷ்ணுவும் நாரதரின் வீணை, துளசி மாலை இவற்றை எடுத்துக்கொண்டு வைகுந்தம் சென்று விட்டார். இது எதனையும் அறியாமலும், இதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளையும், நினைவில் கொள்ள முடியாமல், நாரதி இப்பொழுது கரையேறினாள்.
ஒரு சமயம் பாற்கடலுக்கு வந்த நாரதர், தன் மகதி எனும் வீணையை வாசித்துக் கொண்டே நாராயணனும், லட்சுமி தேவியும் இன்பமாகத் தனிமையில் இருப்பதை மறந்து அவர்கள் இருக்கும் இடத்தில் தன்னை மறந்து நுழைந்து விட்டார். அச்சமயம், மகாலட்சுமி விஷ்ணுவுடன் இன்பமாகச் லயித்துக் கொண்டிருந்தாள். நாரதர் அங்கு வந்ததைக் கண்டதும், பெண்களுக்கே உரிய நாணம் கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடி மறைந்து விட்டாள். இதனைக் கண்ட நாரதர், பரந்தாமா! என்னைக் கண்டு ஏன் திருமகள் இவ்வாறு ஓடி ஒளிய வேண்டும்? நான்ஐம்புலன்களையும் அடக்கியவன். நான் மோகியுமல்ல, தீயவனும் அல்ல! பற்றற்றவன்! மாயையையும் வென்று விளங்குபவன். இப்படிப்பட்ட என்னைக் கண்டதும், மகாலட்சுமி ஏன் அகன்று போக வேண்டும்! எனக்கு எல்லாம் ஒன்றே என்பது உங்களுக்குத் தெரியாதா! என்று விஷ்ணுவிடம் வினவினார். அவர் வார்த்தையில் கர்வம் இழையோடுவதையும், ஆணவம் ஆட்சி செய்வதன் தன்மையையும் உணர்ந்தார் பரந்தாமன். பின் நாரதரை நோக்கி, மாயை என்பது அவ்வளவு எளிதாக யாராலும் வெல்ல முடியாத ஒன்றாகும்! மாயையை நீ வென்று விட்டதாகச் சொல்வது எவ்வளவு அறிவீனம்! வேத விற்பன்னர்களும், முற்றும் துறந்த முனிவர்களாலும், யோகிகளாலும் ஏன் அந்த சர்வேசுவரனாலயே வெல்ல முடியாத ஒன்றே நீ வென்றதாகக் கூறுவது எனக்குச் சிரிப்பைத் தான் வரவழைக்கிறது! முக்குணத்தோடு கூடிய எவராலுமே மாயையை வெல்ல முடியாது என்பதை உணர்வாயாக! இந்த உலகில் அறிஞர், மூடர், மத்திமர் என்ற மூவகை மக்கள் உள்ளனர். இவர்களுள் அறிஞனைத் தருமம் அறியாதவனாகவும், மூடனைத் தருமம் அறிந்தவனாகவும், மத்திமனை இரண்டையும் அடைய முடியாதவாறும் செய்யும் செயலானது மாயையானது காலத்துடன் சேர்ந்து செய்யும் குறும்பு விளையாட்டே! அதனை யாராலும் அறியவும் முடியாது! வெல்லவும் முடியாது! அவ்வாறு ஒருவன் நினைத்தால் அதுவும் வெறும் மாயையே என்றார்.
இதனைக் கேட்ட நாரதர் மாயையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆசைப்பட்டார். அவர் விஷ்ணுவிடம், பரந்தாமா, அந்த மாயை எப்படிப்பட்டவள்? அவள் வல்லமை யாது! அவள் உறையும் இடம் எது? நான் அவளைச் சந்தித்து அவளது குணத்தையும், தன்மையையும் அறிய மிகவும் ஆசைப்படுகிறேன். என்றார். விஷ்ணுவும், நாரதா என்னுடன் புறப்பாடு! அந்தப் பெருமை மிக்க மாயையை உனக்குக் காட்டுகிறேன்! அவள் பெருமையும் உனக்கு விளங்கும்! என்று கூறி நாரதரையும் தன் கருட வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கடல், மலை, நதிகள் இவற்றைக் கடந்து கன்யாகுப்ஜம் அடைந்து, நாரதரைக் குளத்தருகில் கொண்டு வந்து நீராடச் செய்தார். அதன் பொருட்டே, இப்பொழுது ஒன்றும் புரியாமல் நாரதர் நாரதியாக மாறிக் குளத்தங்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தாள். **குளத்தங்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தவளைக் காலத்துவஜன் என்ற பேரழகு வாய்ந்த மன்னன் வேட்டையாட வந்த பொழுது வழி மறித்து நின்றான். நாரதியைக் கண்டதும் அவள் பேரழகில் பேச்சு மூச்சற்று நின்று விட்டான். உள்ளம் நிலையின்றித் தடுமாறியது! பின் நாரதியை நோக்கி, ஹே அழகிய பெண்ணே! நீ யார், தேவலோக அப்சரஸோ? நாகமங்கையா? உன்னைப் போன்ற ஒளி பொருந்திய கண்களைக் கொண்டவளை நான் இதுவரை பார்த்ததே இல்லை! என் மதி மயங்குகிறது! நான் என் நிலையிலும் இல்லை! நீ என்னை மணந்து கொண்டால் இந்த நாட்டிற்கே அரசியாவாய்! சுகபோக வாழ்வும் உன்னை வந்தடையும், என்ன கூறுகிறாய்? என்று ஆசை வார்த்தைகள் பல கூறி அவளைத் தன் வசம் இழுத்தான் காலத்துவஜன். இதற்கு நாரதி, ஹே ராஜனே! நான் யார் என்று எனக்கே தெரியவில்லை! எல்லாமே ஒரு மர்மமாகவே உள்ளது! இப்பொழுது நீயே எனக்குத் துணை! உன்னைப்பார்த்தால், சிறந்த குணவானாகவும், தர்மவானாகவும், பேரழகு கொண்டவனாகவும் இருக்கிறாய்! உன்னை மணக்கச் சம்மதிக்கிறேன்! இப்பொழுது உன்னை விட்டால் எனக்குக் கதியுமில்லை! என்று நயம்பட இனிக்க இனிக்க மயக்கத்துடன் கூறினாள். காலத்துவஜன் நாரதியை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நாரதியும் இவ்வாறாகக் குடும்ப வாழ்வில் சிக்கிக் கொண்டாள். முற்றும் துறந்த முனிவர் நாரதர், யாதும் அறியாமல், எல்லாவற்றையும் மறந்து, இல்லற வாழ்வைச் சுவைபட நடத்தி வந்தார் நாரதியாக.
நாட்கள் விரைவாகச் சென்று கொண்டிருந்தன. அந்தந்தக் காலத்தில் என்னென்ன நடக்க வேண்டும் என்பது இயற்கை விதியல்லவா? நாரதியும் கருவுற்றாள். வளைகாப்பு, சீமந்தம் முதலிய எல்லாச் சடங்குகளும் எல்லாப் பெண்களுக்கும் நடப்பது போல நடந்தன. சிறிது காலம் கழித்து ஆண்மகன் ஒன்றை ஈன்றெடுத்தாள். குழந்தைக்கு வீரவர்மன் என்று பெயரிட்டுப் பெருமையுடன் வளர்த்து வந்தனர் நாரதியும், காலத்துவஜனும். சிறிது நாட்கள் கழிந்து மீண்டும் ஒரு குழந்தைக்குத் தாயானாள் நாரதி. பிள்ளைக்குச் சுதன்மன் என்று பெயர் வைத்தனர். எப்பொழுதும் இல்லற சுகத்திலேயே, இன்ப விளையாட்டுக்களிலேயே தங்கள் நேரத்தைச் செலவிட்டனர் நாரதியும் அரசனும். பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடின. பன்னிரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்து முழு சம்சாரியாகத் தன் காலத்தை மாற்றிக்கொண்டாள் நாரதி அல்லது நாரதர்! பிள்ளைகளுக்குத் திருமணம் நடந்தது. பன்னிரண்டு மருமகள்களும் வந்தனர். பல பேரக் குழந்தைகளும் பிறந்தன. அதுவரை இன்பம் ஒன்றையே அனுபவித்து வந்தாள் நாரதி. அவ்வப்பொழுது சில வேளைகளில் எதற்காகவேனும் கவலை கொள்வாள் நாரதி. பிள்ளைகளுக்கு ஏதாவது வியாதியுன்டானால் துவளுவாள். மருமகள்களிடத்தில் சண்டை சச்சரவுகள், எங்கேயும் போல, அங்கும் நடக்கும் அவ்வப்பொழுது! அந்தச் சமயங்களில் வருந்துவாள். இவ்வாறாகக் குடும்ப வாழ்வில் இரண்டறக் கலந்து தன் முன் பிறவியையோ, நாரதராகத் தான் இருந்து இவ்வாறு பெண்ணாக மாறியதையோ, விஷ்ணுவால் குளத்தில் குளிக்குமாறு கூறப்பட்டு, அதற்கு உடன்படவும் தன் உருவம் மாறியதையே நாரதர் உணரவேயில்லை! அவர் தான் இப்பொழுது முழுசம்சாரியும், முழு நேர சம்சாரியுமாயிற்றே! எல்லோர்க்கும் வாழ்க்கை என்பது ஒரே மாதிரியாகச் சீராகப் போய்க் கொண்டிருக்காதல்லவா! நாரதியின் வாழ்வும் மாறும் காலம் நெருங்கி வர ஆரம்பித்தது! விஷ்ணுவின் நோக்கமும், அரங்கேறும் காலம் விரைவில் வந்தடைந்தது! நாரதி எவ்வாறு நாரதர் ஆகிச் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு, மீண்டும் தேவரிஷியனார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? *தேவி பாகவதம் தொடர்கிறது :
இப்பொழுது காலம் தலைகீழாக மாறத் துவங்கியது! தொலை துõர மாமன்னன் ஒருவன், காலத்துவஜன் எப்பொழுதும் இன்ப வேட்கையிலேயே மூழ்கிக் கிடந்ததையும், ஆட்சியை மறந்து நாரதியிடம் மதிமயங்கிக் கிடப்பதையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். பெரும்படை கொண்டுவந்து காலத்துவஜன் நாட்டை முற்றுகையிட்டுப் போர் புரிந்தான்! உக்கிரமான சண்டை தொடர்ந்தது. போரில், அந்தோ பாவம், தன் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் இழந்தாள் நாரதி! யுத்த களத்தில், அவர்கள் வீரமரணம் அடைந்தனர். காலத்துவஜன் மட்டும் நாரதியின் மேல் இருந்த மோகத்தினாலும், காமத்தினாலும் திரும்பி வந்தான். நாரதி ஆற்றொணாத் துயர் கொண்டு அழுது புலம்பி, என் செல்வங்களே! என்னை விட்டு எங்கே போனீர்கள்! <உங்களைப் பிரிந்து நான் எவ்வாறு வாழ்வது? நீங்கள் போன பின் இந்த உலகில் எனக்கு என்ன இருக்கிறது! உங்கள் பிரிவு என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே! நான் என்ன செய்வேன்! என்று பெருங்குரலெடுத்து அழுதாள்! அரற்றினாள்! புரண்டாள் பூமியில்! ஆறுதல் கூற யாருமின்றி தவித்தாள்! தேற்றுவார் இல்லாமல் துவண்டாள்! எங்கும் இருளாகவே காட்சி தந்தது அப்பொழுது - ஏனம்மா அழுகிறாய்? என்று ஆறுதல் கூறும் விதமாய் ஒரு குரல் ஒலித்தது. அந்தத் திசையை நோக்கி நாரதி திரும்பினாள். அங்கே ஒரு வயோதிக பிராமணர் இவளை நோக்கி வந்து கொண்டிருந்தார். வந்தவளிடம் தேற்றும் விதமாகவும், உலக உண்மையைப் புரிய வைக்கவும் தத்துவங்களை அடுக்கடுக்காக விளக்காக ஆரம்பித்தார். ஆம், அவர் தத்துவ வேதங்களுக்கெல்லாம் தலைவரான மகாவிஷ்ணுவே!
ஹே மங்கையே! உண்மையைப் புரிந்து கொள்! மணாளன் என்றும், மகன்கள் என்றும், மகள்கள் என்றும், பேரன் பேத்திகள் என்றும் இந்த வாழ்க்கையில் நீ வைக்கும் பந்தபாசம் ஒரு மாயை போன்றதே! நீ யார்! இந்தப் பிள்ளைகள் எல்லாம் யாருடைய பிள்ளைகள்! இவர்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்! இந்தப் பிரிவினையை நினைத்து ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? இவையெல்லாம் வெறும் சூன்யமே! நீ உன் ஜீவாத்மா கடைத்தேறும் வழியைப் பார்! என்று கூறித் தேற்றினார். பின் நாரதி, அவள் கணவன் காலத்துவஜன், மற்றவர்கள் யாரையும் பரமாத்மா தொலைவிலுள்ள புருஷதீர்த்தம் எனும் தடாகத்திற்கு அழைத்து வந்தார். இந்தக் குளத்தில் மூழ்கி அர்த்தமற்ற உன்வீண்துயரங்களையெல்லாம் தலை முழுகிவிடு! உனக்கு முன் பிறவிகளில் எத்தனை கணவன்மார்கள் இருந்தார்கள் என்று அறிவாயா? எத்தனை பிள்ளைகள் இருந்தார்கள் என்பதை அறிவாயா? முற்பிறவிகளில் எத்தனை தாய் தந்தையர், எந்த எந்தப் பிறவிகளில் எந்தெந்த உறவு முறைகள், எத்தனை சகோதர சகோதரிகள் இருந்தனர் என்பதையாவது அறிவாயா? யாருக்கென்று இப்பிறவியில் அழத்துணிந்தாய்! வேதனை படத்துணிந்தாய்? துயருற்று துவளத் துணிந்தாய்! இவையாவும், இந்த உறவு முறைகளும், இன்ப துன்பங்களும், ஏற்றத் தாழ்வுகளும், பாப புண்ணியங்களும், செழுமையும் வறுமையும் இன்னபிற பொருள்களெல்லாம் நிரந்தரமானவையல்ல! எல்லாம் ஒரு மாயத் தோற்றமே! இக்கணமே இந்தக் குளத்தில் மூழ்கி எழுவாயாக! என்றார் அந்தணர் வடிவில் வந்த முகுந்தன். இப்பொழுது நாரதி அந்தத் தடாகத்தில் மூழ்கி எழுந்தாள். தன்னை நோக்கிக் கொண்டாள். மீண்டும் தன் சுயஉருவமான நாரதராக மாறினாள் நாரதி. நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை! அச்சமயம்-
வயோதிகக் கிழவர் வந்த சுவடு மறைந்து உலகளந்த பெருமாளாக நாரதர்முன்தோன்றி, அவரது வீணையையும், துளசி மாலையையும் நாரதரிடமே கொடுத்தார். நாரதர் ஒன்றும் விளங்காமல் குழம்பினார்! திருவாய் மலர்ந்தார் வைகுந்தவாசன்! பராசக்தியே அவர்மாயையை விலக்கியதைக் கூறினார். ஹே நாரதா! இந்த மாற்றத்தையே அறிஞர்கள் மாயா விலாஸம் என்று சொல்வார்கள் என்றார். நாரதர் பரந்தாமனிடம், எனக்கு அதே உள்ளம், அதே உடல், அதே ஆண்மை, அதே அறிவு இப்பொழுது வந்து விட்டது! நான்பெண்ணாக மாறிப் பல இன்பங்களில் ஈடுபட்டு முழுநேர சம்சாரியாக மாறியதை என்னால் இப்பொழுது உணர முடிகிறது! அது போலவே, ஆனால் நான் பெண்ணாக இருந்த போது முன்பு நாரதனாக இருந்தவன் என்பதை எப்படி உணரத் தவறினேன்! ஏன் என் எண்ணத்திரை அப்பொழுது மூடிக் கொண்டது! எனக்கு அந்த உணர்வு இருந்திருந்தால், நான் நாரதன் என்ற எண்ணம் இருந்திருந்தால், சம்சார வாழ்க்கைக்கு உடன்பட்டிருக்க மாட்டேனல்லவா?! என்று தன் ஐயத்தை ஐயனிடம் வினவினார் தேவரிஷி. பரந்தாமன் மேலும் விளக்கினார்.
ஹே மகரிஷியே! இதைக் கேளும்! எல்லா உயிர்களிடத்திலும் சுக துக்கங்கள் ஏராளம்! நீ பெண் உருவம் எடுத்தது ஒரு கனவே! ஒரு மாயத் தோற்றமே! கனவில் உண்மை நிலை மறந்து போகும், மறைந்தும் போகும்! நிகழ்வில் நடப்பது சாசுவதம். அதுவே உண்மை! அதுவே மகத்துவம்! நீ எடுத்த பெண் உருவம் ஒரு கனவைப் போன்றதால் நீ உன் உண்மையான நாரதர் பிறவியை உணரமுடியவில்லை! இப்பொழுது நீ நாரதராக இருப்பது நிஜ உணர்வு. எனவே, கனவில் கண்டதை உன்னால் உணரமுடியும்! இதுவே மாயையின் செயல் நீ மாயையைக் காணலாம்! ஆனால் அதனைக் கடந்து விடுவோ, வென்று விடவோ முடியாது என்பதனை உணர்ந்து கொள்! அந்த மாயையில் அமிழ்ந்து போகாமல் ஞான நிலையை மட்டுமே அடைய முயற்சி செய்யலாம்! இந்த சம்சார பந்தத்தில் இது எவ்வாறு வந்தது, அது எவ்வாறு வந்தது என்ற மயக்கத்தைத் தவிர்! சகல தேவர்களாலும், முனிவர்களாலும், பிரம்ம ஞானிகளாலும் யோகிகளாலு<ம், ஏன் மும்மூர்த்திகளான எங்களாலும் கூட அந்த மாயையை அறிய இயலாது! காலம், கர்மம், சுபாவம் முதலியவைகளால் மாயையானது எங்கும் நிறைந்து வாழ்வில் சுக துக்கங்களை உண்டாக்குகிறது! அந்த மகாசக்தியே மாயை! மாயை விலக வேண்டுமெனில், மாய விலாஸினியாகவும், சச்சிதானந்த வடிவினனாகவும் உள்ள அந்தப் பராசக்தியை வணங்கித் தாள் பணிய வேண்டும்! அவளே அனைத்துலகையும் ஆளும் மாயா வடிவம்! பராசக்தியே மாயைக்குத் தலைவி! அவளை வணங்கி அந்த மாயையை விலக்க வேண்டித் தவம் செய்தலே மாயை அகலும் வழி என்பதை உணர்வாயாக! என்று விளக்கி மறைந்தார் மகாவிஷ்ணு.
நாரதரும் உண்மைகளை உணர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் தான் அகம்பாவமாக நடந்து கொண்டதற்கு வருந்தினார். மகா சக்தியாகிய பராசக்தியே மாயையானவள் என உணர்ந்து வணங்கினார். காலத்துவஜனும் உண்மையை உணர்ந்து, அரண்மனை விட்டுக் கானகம் புகுந்து தவமேற்கொண்டு வீடுபேறு பெற்றான்! மாயையில் அகப்படாதவர் யாருமில்லை! கயிற்றைப் பாம்பென்றும், பாம்பைக் கயிறென்றும் நினைப்பதும் மாயையே!