பதிவு செய்த நாள்
10
ஜூலை
2014
12:07
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி, நேற்று, 14 கோபுரங்களுக்கான பாலாலயம் அமைத்து பூஜை செய்யப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பனிரெண்டு ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தமிழக அரசு, 10.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம், 5ம் தேதி, கோவில் திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் துவக்கி வைத்தார். கோவிலில், ஏழு பிரகாரங்களிலுள்ள, 21 கோபுரங்களில் திருப்பணி செய்ய முடிவு செய்து, முதற்கட்டமாக ஏழு கோபுரங்களுக்கு ஏற்கனவே பாலாலயம் நடத்தப்பட்டது. நேற்று காலை, 6 மணிக்கு, ராஜகோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், பரமபத வாசல், உடையவர் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, தாயார் சன்னிதி, ஆச்சார்யா சன்னிதி உள்ளிட்ட, 14 கோபுரங்களில் திருப்பணி மேற்கொள் பாலாலயம் அமைத்து பூஜை செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவில் உதவி கமிஷனர் ஜெயராமன் தலைமை வகித்தார். கோவில் திருப்பணியில் ஸ்தபதிகள், ஓவியர், பெயிண்டர், சாரம் கட்டும் பணியாளர், கட்டுமான பணியாளர்கள் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். “21 கோபுர பணிகள் முடிந்த பின், கருவறை கோபுரத்திற்கான, திருப்பணிகள் துவங்கும்,” என உதவி கமிஷனர் ஜெயராமன் தெரிவித்தார்.