பதிவு செய்த நாள்
10
ஜூலை
2014
12:07
மாமல்லபுரம் : முகையூரில், பெரியபாளையத்தம்மன் கோவில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கூவத்துார் அடுத்த, முகையூர், வள்ளுவப் பகுதியில், பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், நீண்டகாலமாக கீற்றுக்கொட்டகையாக இருந்தது. பொதுமக்கள், புதிய கோவில் அமைக்க முடிவெடுத்து, 18 ஆண்டுகளுக்கு முன், துவக்கிய கட்டுமான பணி இடையில் தடைபட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் பணி துவங்கி, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், தற்போது கட்டிமுடிக்கப்பட்டது. பெரியபாளையத்தம்மன் மூலவர் சன்னிதி, மகாமண்டபத்துடன் அமைக்கப்பட்டு, மகாமண்டப உட்புற சுவரில், கணபதி, பாலமுருகர் ஆகியோர் புடைப்பு சிற்பங்கள் மற்றும் மூலஸ்தான வெளிப்புற சுவரில், வைஷ்ணவி, மகேஸ்வரி, நின்றநிலை விநாயகர், துர்க்கை, பிராமி ஆகியோர் புடைப்புச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த 6ம் தேதி, காலை, கிராம தேவதைகள் மற்றும் விக்னேஷ்வர வழிபாடு துவங்கி, நேற்று வரை நான்கு கால பூஜை நடந்தது.அதைத் தொடர்ந்து, நேற்று காலை 9:45 மணிக்கு, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முகையூர் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள், அம்மனை வழிபட்டனர்.