பதிவு செய்த நாள்
15
ஜூலை
2014
10:07
கோட்டயம்: கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில் ஆடி மாத ’மருந்து பிரசாதம்’ வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 17 ல் துவங்கி, ஆகஸ்ட் 16 வரை நடக்கிறது. கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ., எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ., தூரத்தில் உள்ளது கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயில். இங்குள்ள ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகத்தின் கீழ், இக்கோயில் செயல்படுகிறது. நம்பூதிரி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் இக்கோயில், பாரம்பரிய பெருமை மிக்கது. பிரம்மனின் அருள்படி, தேவலோக மருத்துவர்களான அஷ்வினி குமாரர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த பழமையான கோயில் என்பது ஐதீகம். நோய் தீர்க்கும் மருந்து, பிரசாதமாக வழங்கப்படுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. அம்மன் விக்ரகம் முன்னிலையில், மருத்துவ சாஸ்திர விதிமுறைகள் படி இந்த நோய்தீர்க்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தை பெற்றுச்செல்லும் மக்கள் 41 நாட்கள் அருந்தி விரதம் இருந்தால் நோய்கள், பூர்வஜென்ம பாவம் அகலும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு, ஆடி முதல்நாளான ஜூலை 17 முதல் ஆக.,16 வரை தினமும் காலை 6 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 7:30 வரையும் மருந்து பிரசாதம் வழங்கப்படும். விழாவின் முக்கிய நிகழ்வான, ’மருந்து பொங்கலிடும் நிகழ்ச்சி’ ஜூலை 21 காலை 9 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் நாராயணன் நம்பூதிரி தலைமையில், நிர்வாகி ஹரி நம்பூதிரி மற்றும் விழாக்குழுவினர் செய்துவருகின்றனர். பூஜை விபரங்களுக்கு 094966 20092, 094961 34500 ல் தொடர்பு கொள்ளலாம்.