பெரியகுளம் : பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் முக்கிய திருவிழாவான நாளை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுக்கின்றனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி மாரியம்மன் திருவிழாவிற்கு அடுத்தபடியாக, பெரியகுளம் கவுமாரியம்மன் திருவிழா பிரசித்தி பெற்றது. கவுமாரியம்மனை வணங்கினால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவிழா ஜூலை 1ம் தேதி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 7ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன் குதிரை, யானை, பூப்பல்லக்கு, அன்னபட்ஷி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்கின்றனர். 9ம் நாள் திருவிழாவான இன்று, (ஜூலை 15ல்) அம்மனுக்கு தண்ணீர் எடுத்து மாவிளக்கு வழிபாடும், நாளை 16ல் அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டக்கப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.