பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
04:07
குலுங்கும் மலை, திருக்கூடாச்சலம் என்று புராணப்பெயர் பெற்ற திரிகூடமலையே பின்னாளில் திருக்குற்றாலமென விளங்குகிறது. ஆதிகாலத்தில் இது வைணவத் தலமாக இருந்தது. மாமுனிவர் அகத்தியர் இங்கிருந்த பெருமாளுக்கு மூலிகைச்சாறு கொண்டு அபிஷேகம் செய்து, குறுகுக... குறுகுக... என்று பெருமாள் தலையில் கைவைத்து அழுத்தி சிவலிங்கமாக மாற்றினார் என்பர். அக்ததியரின் விரல் சிவலிங்கத்தில் பதிந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அகத்தியர் அழுத்தியதாலும், அருகிலுள்ள நீர்வீழ்ச்சியின் ஓசையாலும் குற்றாலநாதருக்கு தலைவலி ஏற்பட்டதாக ஐதீகம். அது நீங்க, அரிய வகை மூலிகைகள் கொண்டு தைலம் தயாரித்து காப்பிட்டு அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அதை இன்றும் தரிசிக்கலாம். கருட பார்வையில் இத்தலம் சங்கு வடிவில் காட்சி தரும். அதனால் சங்கக் கோவில் என வானோர் கொண்டாடுகிறார்கள்.
இக்கோயிலின் தலமரம் குறும்பலா. இதன் ஒரு பகுதியை இன்றும் கோவிலில் காணலாம். சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இது போற்றப்படுகிறது. பராசக்தி யோகத்திலிருப்பதால், இதை யோகபீடம் என்பர். பஞ்ச சபைகளில் இது சித்திரசபை. இச்சபையில் சித்திர வடிவில் நடராஜரின் நடனக் கோலத்தை தரிசிக்கலாம். இங்குள்ள சித்திர சபைக்கு நவநாயகர்கள் அனுதினமும் எழுந்தருளி ஆராதனை செய்வதாக ஐதீகம். குபேரனுக்குப் பிடித்தமான வடவருவி, சித்திராநதி, மதுகங்கை என்ற தீர்த்தங்களுடன் பிரதான அருவியும், ஐந்தருவிகளும் கொண்ட திருத்தலம்.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி குற்றால நீர்வீழ்ச்சிக்கு அருகில், மலையடிவாரத்தில் அமைந்துள்ளது குற்றால நாதர் கோயில். வனதேவதையான செண்பகா தேவியின் கோயில் மலையடிவாரத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மலைமேல் உள்ளது. சித்திரை மாதப் பவுர்ணமியன்று செண்பகாதேவிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்நாளில் இரவு வேளையில் மலைமேல் சந்தன (மஞ்சள் நிறத்தில்) மழை பெய்யுமென்று தலபுராணம் கூறுகிறது. இதனை அவ்வூர்ப் பெரியவர்களும் உண்மையென்று வலியுறுத்துகிறார்கள். இக்கோவிலுக்கு மேலேயுள்ள மலைமீது, மதுகங்கை என்ற தேனருவியில் கங்கையானவள் சிவலிங்கத்திற்கு தேனாபிஷேகம் செய்து வழிபடுவதால், தேன் துளிகள் சந்தன (மஞ்சள்) வண்ண மழையாய்ப் பொய்கிறது என்பது ஐதீகம். சந்தன மழை பெய்ததற்கு அடையாளமாக இரவுவேளையில் சந்தன மணம் வீசுமாம். சிலசமயத்தில் சிறுசிறு துளிகள் சாரல்போல் விழுவதும் உண்டாம். அடுத்தநாள் ஏறிச் சென்றால் மழைத்துளிகள் விழுந்த இடங்களைக் காணலாம் என்கிறார்கள். பாறையின்மேல் விழுந்த மழை நீர் மறைந்து போனாலும், அந்த அடையாளங்கள் மணல் பகுதியுள்ள சில இடங்களில் சந்தன நிறத்தில் காட்சி தருவதைக் கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த மணலை சேகரித்துவந்து பூஜித்து நெற்றியில் இட்டுக் கொள்வார்களாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறுமென்று கூறப்படுகிறது.