பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
05:07
சந்நியாசியாக இருப்பவர் தினமும் கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் பல உண்டு. அவற்றை நெறி பிறழாமல் முறையாக பின்பற்றியவர் காஞ்சிப்பெரியவர். குறிப்பாக சந்நியாசிக்கு உரியது ஜீவகாருண்யம். அதாவது எந்த உயிருக்கும் துன்பம் செய்யக் கூடாது. இதை பெரியவர் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். காஞ்சிப்பெரியவர் தினமும் 21 முறை கைகால்களைச் சுத்தம் செய்து, ஜபம் செய்வார். ஒருநாள், மடத்தின் பின்புறம் உள்ள கிணற்றில் நீர் இறைத்து கை,கால்களைச் சுத்தம் செய்ய வந்தார். நீரில், கட்டெறும்பு ஒன்று மிதப்பதைக் கண்டார். உடனே தன் சிஷ்யர் சிம்சன் வைத்தாவை அழைத்து, ஒரு குச்சியினால் அதை எடுத்து தரையில் போடச் சொன்னார். அப்போது கட்டெறும்பு இறந்து விட்டது. கிணற்றங்கரைக்குச் சென்று குளித்து விட்டு, கை,கால்களைச் சுத்தம் செய்த பின், ஜபம் செய்யத் தொடங்கினார். அதைக் கண்ட வைத்தா பெரியவரிடம், “பெரியவா! ஏன் இப்போது ஜபம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பெரியவர், “டேய்! இந்த கட்டெறும்பு முக்தி அடைந்து விட்டது. அது எவ்வளவு நேரம் தண்ணீரில் தத்தளித்ததோ தெரியாது. அதற்கு மோட்சம் கிடைக்க வேண்டாமா? அதற்காக, ஸ்ரீமந்நாராயணனை நோக்கி ஜபம் செய்தேன். உலக ஜீவராசிகள் அனைத்தும் மோட்சம் பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்,” என்றார். எறும்பை அடக்கம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். இப்படி ஒரு எளிய ஜீவராசியிடம் கூட அன்பு காட்டிய காஞ்சிப்பெரியவரின் கருணையை என்னவென்று சொல்வது!