பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
05:07
ஆதி சிவம் அருவுருவாய் விளங்கும் திருவுருவே லிங்கத்திருமேனி என்று கூறப்படுகிறது. பல்வேறு லிங்கத் திருமேனிகளில் தாராலிங்கம் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இது உருளை வடிவில் இல்லாமல், பாணத்தில் பட்டை பட்டையாய் காட்சிதரும். இதில் பலவகை உண்டு.
பாணத்தில் நான்கு பட்டைகள் கொண்ட லிங்கத்தை வேதலிங்கம் என்று போற்றுவர். பாடல்பெற்ற சக்கரப்பள்ளி திருத்தலத்தின் மூலவர், சதுரமான பட்டைலிங்கமாகத் திகழ்கிறார். கோவை காரமடை ரங்கநாதர் கோயிலில் நாற்பட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். இதில் திருமால் காட்சி தருவதாகவும் சொல்வர். நான்கு பட்டைகள் கொண்ட லிங்கம், நான்கு வேதங்களைக் குறிப்பது.
எட்டுப் பட்டைகள் கொண்ட லிங்கம் அஷ்டதாரா எனப்படும். நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றை இது குறிக்கும். மேலும் இது எட்டு பைரவர்களையும், சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களையும் குறிப்பதுடன், எண் திசை பாலகர்களையும் குறிக்கும் என்பர். காஞ்சி கைலாசநாதர் கோயில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில், சிதம்பரம் நவலிங்க சன்னதி போன்ற இடங்களில் அஷ்டதாரா லிங்கங்களை தரிசிக்கலாம்.
பதினாறு பட்டைகளுடன் திகழும் லிங்கத்தினை சோடஷலிங்கம் என்று போற்றுவர்; சந்திரகலா லிங்கம் என்றும் சொல்வர். சிதம்பரம் நவலிங்கம் சன்னதியில் இதைக் காணலாம். மேலும் பொன்பரப்பி திருத்தலத்திலும் தரிசிக்கலாம். ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கமானது 55 அடி உயரத்தில், பிரம்மா, விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளும் இவ்வாறு இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இந்தத் திருமேனியை கைகளில் தட்டினால் வெண்கல ஒலி எழுவது பிரத்யேகச் சிறப்பு. சேலம்ஆத்தூர், கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம் என்ற இடத்தில் அமைந்துள்ள சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் இந்த லிங்கம் உள்ளது. மேலும், சிறுகனூர்திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில் வளாகத்திலுள்ள கைலாசநாதர் கோவிலில், பதினாறு பட்டைகள் கொண்ட சோடஷலிங்கம் சமதரையில் (ஆவுடையில் இல்லாமல்) உள்ளதை தரிசிக்கலாம். இந்த சோடஷலிங்கத்தை தரிசித்தால் புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நல்ல மக்கட்செல்வம், பொன், துணிவு, ஆரோக்கியமான வாழ்வு, தானியங்கள், நற்செயல்கள், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு பேறுகள் கிட்டுமென்பர்.
32 பட்டைகளுடன் காட்சிதரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம் என்பர்; தரும லிங்கம் என்றும் சொல்வர். காஞ்சிமாநகரிலுள்ள சிவன் கோயிலில் 32 பட்டைகள் கொண்ட சிவலிங்கத்தை தரிசிக்கலாம், இதற்கு 32 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்தால் அனைத்து வகை நலன்களும் பெறலாம்.
64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத்திருமேனி மிகவும் போற்றப்படுகிறது. இது 64 கலைகள், 64 லீலாவினோதங்களைக் குறிப்பது. யோகினி லிங்கம் என்றும் இதை அழைப்பர். இந்த லிங்கத்தை காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம்.
தங்கத்தாலான சிவலிங்கம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிதம்பர ரகசியத்திற்குக் கீழே, ஓரடி உயரத்தில் உள்ளது. ஏகமுகலிங்கமாகத் திகழும் இதற்கு, உச்சிவேளையில் ஒருகால பூஜை மட்டும் நடைபெறும்.
வெள்ளியினாலான லிங்கம் பூஜித லிங்கம் எனப்படும். இது தமிழகத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது. நேபாளத்தில் காட்மாண்டில் பசுபதிநாதர் கோவிலுக்கு அருகி<லுள்ள கோரக்கநாதர் கோயிலில் இது உள்ளது.
பூவுலகில் மனிதர்கள் சிவலிங்க வழிபாடு செய்வதுபோல், தேவலோகத்திலும் தேவர்கள் லிங்க வழிபாடு செய்வதாகப் புராணம் கூறுகிறது. அதற்காக தேவலோக சிற்பியிடம் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பிய லிங்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்; இந்திரன் பதுமராக லிங்கத்தையும்; எமதர்மன் கோமேதக லிங்கத்தையும்; விஷ்ணு இந்திர லிங்கத்தையும்; வாயுதேவன் பித்தளை லிங்கத்தையும்; சந்திரன் முத்து லிங்கத்தையும்; பிரம்மன், குபேரன், சரஸ்வதி முதலானோர் சொர்ண லிங்கத்தையும்; நாகர்கள் பவள லிங்கத்தையும்; அஸ்வினி தேவர்கள் மண்ணாலான லிங்கத்தையும்; ருத்திரர்கள் திருவெண்ணீறு லிங்கத்தையும்; மகாலட்சுமி நெய்யிலான லிங்கத்தையும் பெற்றனர்.
தேவர்கள் தங்களுக்குரிய லிங்கங்களைப் பெற்று தேவலோகத்தில் வழிபட்டாலும், அவர்கள் பூலோகத்திற்கு வந்து சிவ வழிபாடு செய்த தலங்களும் பலவுள்ளன.