பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
05:07
பன்னெடுங்காலமாக பாண்டியநாட்டின் தலைநகராக விளங்கிவந்தது மதுரை. வரலாறு, வைகை, சங்கத்தமிழ் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்நகர் கோயிலாலும் சிறப்புமிகக் கொண்டது. இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயில் உலகப்புகழ் பெற்றதென்பது அனைவரும் அறிந்ததே. இக்கோயில் உருவான வரலாறும் சிலிர்ப்பூட்டுவதே. சுமார் 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகக் கருதப்படும் இக்கோயில், பின்னர் காலப்போக்கில் சிதைந்துபோனது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆண்டவன் குலசேகரப் பாண்டியன். ஒருமுறை அவன் வேட்டைக்குச் செல்லும்போது கடம்பமரத்தின்கீழ் சுயம்புவாய் முகிழ்த்திருந்த சிவலிங்கத் திருமேனியைக் கண்டான். அவ்விடத்திலேயே கோயில் அமைத்து பூஜைகள் செய்தான். கோவிலை மையமாக வைத்து ஊரையும் உருவாக்கினான். பொதுவாக, ஊர் உருவான பின்னரே கோவில் உருவாகும். ஆனால் இங்கு கோவிலை அமைத்தபின்னர் ஊர் உருவாகியது.
குலசேகரப் பாண்டியனின் மகன் மலயத்வஜன். அவன் மனைவி காஞ்சனமாலை. இருவரும் குழந்தைச் செல்வம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். அதன் விளைவாக பார்வதிதேவியே அவர்களுக்கு மகளாக- மீனாட்சியாக அவதரித்தாள்.
மீனாட்சி பருவமடைந்தபின் மதுரையின் ஆட்சிப் பொறுப்பையேற்றுக் கொண்டு திக்விஜயம் மேற்கொண்டாள். சென்ற இடமெல்லாம் வெற்றிபெற்ற தேவி திருக்கயிலையை அடைந்தாள். அங்கு சிவபெருமானைக் கண்டு இவரே தன் மணவாளன் என்றுணர்ந்தாள். பின்னர் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது.
தற்போது மதுரையில் நாம் காணும் கோயில் மலயத்வஜனால் கட்டப்பட்டதல்ல. ஆதிக்கோவில் 1310-ல் மாலிக்காபூரால் தரைமட்டமாக்கப்பட்டது. அதன்பின்னர் மதுரையை ஆட்சிசெய்த கூன்பாண்டியன், மாறவர்மன் சடையவர்மன், சுந்தரபாண்டியன், திருமலை நாயக்கர், முதலாம் கிருஷ்ணப்பர், வீரப்ப நாயக்கர், விசுவநாத நாயக்கர், மருது சகோதரர்கள் உள்ளிட்டோரால் கட்டிமுடிக்கப்பட்டது. கோயிலை சுற்றியுள்ள வீதிகள் சித்திரை வீதி, வைகாசி வீதியென்று தமிழ் மாதங்களின் பெயர்களைக் கொண்டு விளங்குகின்றன.
இக்கோயில்க் கட்டுமான செலவு அன்றைய மதிப்பீட்டில் ஒரு கோடியே இருபது லட்சம் என்று கணக்கிட்டுள்ளனர். இன்றைக்கு பலநூறு கோடி ரூபாய்க்கு சமம்.
அப்போதைய மன்னர்கள் கோயில் கட்ட பொருள் சேர்க்க பல திட்டங்கள் வகுத்து திரட்டினர். குழந்தையில்லாதோர் சொத்துகளும், வாரிசின்றி இறந்த கோவில் பணியாளரின் சொத்துகளும், உச்ச வரம்பிற்கு அதிகமாக வைத்துள்ளவர்களின் நிலங்களும், குற்றவாளிகளின் நிலங்களும், சிவத்துரோகம் செய்த பணியாளர்களின் முழு சொத்துகளும் கோயிலேயே சேரும் என்றனர்.
வீட்டுக்கு ஒரு ஆண்- பெண் கோவில் கட்டும் பணிக்கு வரவேண்டும். கூலியின்றி தாங்களாகவே அவர்கள் வேலை செய்தனர். பணியாட்களும் குறைந்த ஊதியத்திற்கு 17 மணி நேரம் வேலை செய்தனர். கூன் பாண்டியன் உண்டியல் குலுக்கி பொருள் சேர்த்தார்.
திருமலை நாயக்கர் கோயில்த் திருவிழாக்களை நிறுத்திவிட்டு, அதற்கு செலவிடும் பணத்தை கோயில் கட்டக் கொடுத்தார். அத்துடன் வீட்டுக்கு ஒரு பானை கொடுத்து, அதில் தினமும் பிடி அரிசி போடச் செய்து, அதனை காசாக்கியும் கோயில் கட்டக் கொடுத்தார். போரில் வென்றபின் எதிரிகளின் பொக்கிஷங்களை கோயில் திருப்பணிக்குத் தந்தார். இதனால்தான் பொற்றாமரைக்குளம் கட்டப்பட்டது.
கோவில் வளாகத்தில் பாழடைந்த கரிய மாணிக்கப் பெருமாள் கோயிலை இடித்து, அதில் கிடைத்த கட்டுமானப் பொருட்களை கோயில் கட்டக் கொடுத்தார். மருதுபாண்டியர்கள் தங்கள் நிதியிலிருந்து 50 சதவிகிதத்தை கோவில் கட்ட வழங்கினர். கோயில் கட்டத் தேவையான செங்கற்கள் இராமநாதபுரத்தில் தயாராகின. வழிநெடுக ஆட்களை இடைவிடாமல் நிறுத்திவைத்து, அவர்கள் கைகள் மாற்றியே எல்லா செங்கற்களையும் கோயிலிற்கு கொண்டுவரச் செய்தனர்.
இப்படி பற்பல முறைகளால் பெறப்பட்ட நிதிகள் மூலம் இக்கோயில் கட்டப்பட்டது. மன்னர்கள், பணியாளர்கள் மட்டுமல்ல; பொதுமக்களும் கோயில்த் திருப்பணியில் பங்குபெற்றனர்.
சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் செவ்வக வடிவில், 847 அடிக்கு 772 அடி பரப்பளவுள்ள இடத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சக்தி பீடங்களில் முதன்மையானது. ராஜமாதங்கி சியாமளா பீடம் என்றழைக்கப்படுகிறது. மூலவரான மீனாட்சியம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லானது. தமிழகத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்ற பெயரில் 366 கோயில்கள் உள்ளன. அதில் இக்கோவில்தான் முதன்மைக் கோவிலாகும். சாதனைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இக்கோயில் இந்திய அதிசயங்களில் ஒன்றாகிவிட்டது.
பெரும்பாலான கோவில்களில் இறைவன் கிழக்கு முகமாகவும் இறைவி தெற்கு நோக்கியும் கோயில் கொண்டிருப்பர். ஆனால் மதுரையில் சுவாமியும் (சொக்கர்) அம்பிகையும் (மீனாட்சி) கிழக்கு நோக்கியே காட்சி தருகின்றனர்.
மதுரை தமிழகத்தின் 2-வது பெரியநகரம். இது தூங்காநகரம் என பெயர் பெற்றது. இக்கோயில் கலையழகும், சிலையழகும், சிற்பத்தினும், சித்திரவனப்பும் கொண்டது. நாத அமைப்பு கொண்ட தூண்களை உடையது. மூர்த்தி, தலம், தீர்த்தப்பெருமை கொண்டது. கடம்ப மரமும் வில்வ மரமும் தல விருட்சம். பொற்றாமரைக் குளம், வைகை நதி, கிருதமாலை, கொண்டாழி, தெப்பக்குளம், புறந்தொட்டி, நிர்மால்ய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்களாகும். சிறப்பு- மதுரைமல்லி, தாழம்பூ, குங்குமம், பிட்டு பலகாரம்.
பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்திரங்களாக இடம்பெற்றுள்ளன. இதே 64 திருவிளையாடல்கள் சுவாமி கோவில் மகாமண்டபத்தில் வண்ணச்சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன.
திருக்குறள் பெருமையை நிலைநாட்டிய சங்கப் பலகை தோன்றிய இடம் பொற்றாமரைக் குளம் தான். இக்குளத்தின் தென்புறச் சுவரில் 1,330 திருக்குறளும் வெண்சலவைக் கற்களில் பொறித்துப் பதித்துள்ளனர். இக்குளத்தில் இப்போது திருப்பானந்தாள் மடத்தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நம்பித் தம்பிரான் செய்தளித்த உண்மையான பொற்றாமரையையே மிதக்கவிட்டுள்ளனர்.
ராஜசேகர பாண்டியன் விருப்பப்படி நடராசர் தன் கால் மாற்றி ஆடிய தலமிது. அதுதான் வெள்ளி சபை என்ற ரஜத சபை. இது பஞ்ச சபைகளில் ஒன்று. பெயருக்கேற்றாற் போல் சன்னிதி முழுவதுமே வெள்ளியாலானது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த வெள்ளி வேலைப்பாடுகள் அனைத்தும் ஒரு முஸ்லிம் சிற்பியால் செய்து தரப்பட்டதுதான்.
மேலும் இக்கோயிலில் பஞ்ச சபைகளும் உள்ளன. முதல்பிராகாரத்தில் கனகசபையும், ரத்ன சபையும்; வெள்ளியம்பலத்தில் ரஜதசபையும்; நூற்றுக்கால் மண்டபத்தில் தேவசபையும்; ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திர சபையும் அமைந்துள்ளன.
ஆயிரங்கால் மண்டபத்தில் ஒலியெழுப்பும் சிலைகள் பலவுள்ளன. அத்துடன் ஏழு இசைத்தூண்களும் உள்ளன.
இங்கு முக்கியமான இடம் திருமலை நாயக்கர் கோவிலுள்ள நூல் நிலையம். ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தைத் தரிசித்து மீனாட்சியம்மன் அருளைப் பெறுவது அவசியம்.
இக்கோயிலில் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் மிகவும் உயரமானது. தென்கோபுரம். உயரம் 160 அடி. இதில் 1,511 சிற்பங்கள் உள்ளன.
மேலை கோபுரத்தில் 1,124 சிற்பங்களும்; கீழை கோபுரத்தில் 1.011 சிற்பங்களும்; வடகோபுரத்தில் 404 சிற்பங்களும்; விமானத்தில் 174 கதைச் சிற்பங்களும் என மேலும் பல சிற்பங்களுடன் மொத்தம் 4,224 வண்ணச் சிற்பங்களைக் காணலாம். அத்துடன் கோயிலில் 264 சுவாமி சிலைகளும் உள்ளன.
தெப்பக் குளத்தில் கிடைத்த ஏழு அடி உயர முக்குறுணிப் பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசி மாவால் மிகப்பெரிய கொழுக்கட்டை செய்து விநாயகர் சதுர்த்தியன்று படைப்பார்கள். அம்மனுக்கு 15 திருப்பெயர்களும் சுவாமிக்கு 14 திருப்பெயர்களும் உள்ளன. கோயில் பிரசாதம் பிட்டுதான்!
மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை எழுந்தருளலும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களாகும்.