பதிவு செய்த நாள்
18
ஜூலை
2014
10:07
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் அருகில் உள்ள, பொய்யா குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. திவ்ய தேச கோவில்களில் ஒன்றான காஞ்சிபுரம் யதோக்தகாரி (சொன்ன வன்னம் செய்த பெருமாள்) கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் குளத்தில், 12 ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் அவதரித்ததால், இதற்கு பொய்யா குளம் என, பெயர் உண்டானது.இந்த குளத்தில் நீர் வற்றி, புல் - புதர் மண்டி கிடந்ததால், இதை சீரமைக்கும் பணியை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த இரண்டு நாட்களாக அதை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதே போல் காஞ்சிபுரத்தில் உள்ள பிற, கோவில் குளங்களும் துார்ந்து போய் உள்ளன. அதையும் சுத்தப்படுத்தினால் மழை காலத்தில் தேங்கும் தண்ணீர் நிலத்தடி நீர் அதிகரிக்கவும், சுத்தமாகவும் இருக்கும். இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது: கோவில் குளங்கள், மழை நீர் சேமிப்பு திட்டத்திற்கு முன் உதாரணம். வீணாகும் தண்ணீரை சேமித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, அந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. காலப்போக்கில் வீடுகள் பெருக்கத்தால், பலர் அதன் நீர் வழியை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது பெரும்பாலான குளத்திற்கு தண்ணீர் வரும் வழி அடைக்கப்பட்டு விட்டது. அதை மீண்டும் ஏற்படுத்தி நிலத்தடி நீர் அதிகரிக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.