பதிவு செய்த நாள்
19
ஜூலை
2014
01:07
தேனி:தேனி மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. காலை முதல் இரவு வரை பெண்கள் கூழ் காய்ச்சி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று ஆடி முதல் வெள்ளி அம்மன் கோயில்களில் கொண்டாடப்பட்டது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி வீரகாளியம்மன் கோயில், அல்லிநகரம் மாரியம்மன் கோயில், தேனி பத்திரகாளியம்மன் கோயில், பெரியகுளம் மாரியம்மன் கோயில், கம்பம் கவுமாரியம்மன் கோயில், கூடலூர் துர்க்கை கோயில் உட்பட அம்மன் கோயில்கள் காலை 5 மணிக்கே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.பெண் பக்தர்கள் அதிகாலையிலேயே, கோயில்களில் கூழ் காய்ச்சினர். தங்களது நேர்த்திக் கடனுக்கு ஏற்ப சிலர் உப்பு போடாமலும், உப்பு போட்டும், வேப்பிலை போட்டும், வெங்காயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டும் கூழ் காய்ச்சினர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர்.பெரிய பாத்திரங்களில் கூழ் காய்ச்சி, பெரிய பேப்பர் கப்களில் ஊற்றி எல்லோருக்கும் சப்ளை செய்தனர். மதியம் பெரும்பாலான அம்மன் கோயில்கள் திறந்திருந்தன. இதனால் காலை முதல் இரவு வரை கூழ் பக்தர்களுக்கு கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.கூடலூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயில் வளாகத்தில் உள்ள மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. பெண்கள் அதிக அளவில் அம்மனை தரிசித்தனர். கற்கண்டு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பாதயாத்திரை மகளிர் குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர்.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல் துர்க்கையம்மன் கோயிலிலும் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதம் வழங்கப்பட்டது.