பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
01:07
தலைவாசல்: தலைவாசல் அருகே, ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், தேய்பிறை
அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு பூஜை நடந்தது. தலைவாசல் அருகே உள்ள, ஆறகளூர் கிராமத்தில் பழமை வாய்ந்த, காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அஜிதாங்க பைரவர், ருருவ பைரவர், சண்ட பைரவர், குரோதான பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், ஸ்ரீகால பைரவர் என, எட்டு பைரவர்களுக்கு, எட்டு திசைகளில் சிலை அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும், தேய்பிறை அஷ்டமி நாளில், கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டு, பைரவரை வழிபாடு செய்தால், திருமணத் தடை, நவகிரக தோஷம் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம். நேற்று முன்தினம், அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் நடந்தது. பின், கால பைரவர் வெள்ளி கவசம், சந்தன காப்பு, புஷ்ப அலங்காரம் என, சர்வ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நள்ளிரவு, 12 மணியளவில், கால பைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கு தீபாராதனை பூஜைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.