பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
04:07
வேலூரை அடுத்த ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காவடியுடன் வந்தவண்ணம் உள்ளனர்.திங்கள்கிழமை காலை பால்குட சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.அதையடுத்து மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. ஆடிக் கிருத்திகையையொட்டி கோயில் வளாகத்தில் இரவு 7 மணியளவில் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் பத்மநாபன் ஆகியோர் செய்து வருகின்றனர். வள்ளிமலை முருகன் கோயிலிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு காவடி எடுத்து வருகின்றனர்.பாலமதி குழந்தை வேலாயுதபாணி திருக்கோயில், புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், மகாதேவமலை உள்ளிட்டவற்றிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.ரத்தினகிரி, மகாதேவ மலை, வள்ளிமலை ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் பஸ்களை இயக்கத்தொடங்கியுள்ளது.காவடி ஊர்வலம்வந்தவாசியில் காவடி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடிக் கிருத்திகையையொட்டி ஆண்டுதோறும் வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் திருத்தணிக்கு காவடி எடுத்துச் செல்வர். இவர்கள் வந்தவாசி நகரில் காவடிகளுடன் ஊர்வலமாகச் சென்று, பின்னர் திருத்தணிக்கு பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்வர்.இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகையையொட்டி கீழ்வில்லிவலம், மாம்பட்டு, அம்மையப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மயில் காவடிகளுடன் வந்தவாசி நகரில் தேரடி, பஜார் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்றனர். இதையொட்டி போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்