பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
12:07
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று, ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமிகோவிலுக்கு, நேற்று, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணி முதல், பக்தர்கள் கூட்டம் வர துவங்கினர். அதிகாலை சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கல்பதித்த சிறப்பு நகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11:00 மணிக்கு, பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதை தொடர்ந்து முருக னுக்கு, 750 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, மூலவரான சுப்ரமணியருக்கு, மகாபிஷேகம், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரம், சோடச தீபாராதனை வழிபாடு நடந்தன. விழாவையொட்டி சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு, சுவாமி புறப்பாடை அடுத்து, மாடவீதி உலாவுடன் விழா நிறைவு பெற்றது.