பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
12:07
ஆடிக்கிருத்திகையை ஒட்டி, நேற்று காஞ்சிபுரம் மாவட்டத் தில் உள்ள, முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.அலங்காரம் ஆடிக்கிருத்திகையான நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் காலையில் இருந்தே சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், மயில் காவடி, புஷ்ப காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் சுமந்தும் வந்தனர். சில பக்தர்கள், உடலில் வேல் குத்தியும், தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர்.காஞ்சிபுரத்தில் பழமையான கோவில்களில் ஒன்றான குமரகோட்டம் முருகர் கோவிலில், நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இரவு திருவீதி உலா நடந்தது.அபிஷேகம்திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நடை அதிகாலை 2:00 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் மொட்டையடித்து சரவண பொய்கையில் நீராடி, கந்தனை வழிபட்டனர். அர்ச்சனை செய்யும் உற்சவர் மண்டபத்திலும் கூட்டம் அலைமோதி இருந்தது. மாலை 3:00 மணியளவில் உற்சவருக்கு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டை, சுப்பிர மணிய சுவாமி கோவிலில், சுப்ர மணிய சுவாமி நேற்று ஆடிக் கிருத்திகை முன்னிட்டு, சந்தன காப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உற்சவர் மண்டபத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை உடன், எழுந்தருளினார். ஸ்ரீபெரும்புதுார், பூதபுரி தர்ம சாஸ்தா கோவிலில், ஆடிக் கிருத்திகை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை சமேதமாக எழுந்தருளி உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு, 16ம் ஆண்டு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.சிறப்பு பேருந்துஸ்ரீபெரும்புதுார், தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள், வந்து சுவாமியை வழிபட்டனர்.சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறப்பு பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கியது.