பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
02:07
சேலம்: சேலம் முருகன் கோவில்களில், நேற்று ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜையில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.சேலம், அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. கோவிலின் செயல் அலுவலர் சுரேஷ்குமார், தக்கார் ஞானமணி, உற்சவ கமிட்டி தலைவர் சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பால் அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. குமரகிரி மலை மேல் நடந்த அன்னதானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆடிக்கிருத்திகை, 1,008 லிட்டர் பால் அபிஷேக விழாக் கமிட்டியர் செய்திருந்தனர்.சேலம், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலையில் ஓம்கார தீபமேற்று விழாவும், கூட்டு வழிபாடும் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஓம்கார தீப பாலாபிஷேக, 22ம் ஆண்டு விழாக்குழுவினர் செய்திருந்தனர். சேலம் கந்தாஸ்ரமத்தில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, ஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சேலம் செவ்வாய்ப்பேட்டை சித்திரைச் சாவடி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, நேற்று காலை, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பால் அபிஷேகம், பால் குட ஊர்வலம் ஆகியவை நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம், ஊத்துமலை முருகன் கோவில், ஃபேர்லேன்ட்ஸ் முருகன் கோவில் உள்ளிட்ட சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள், ஹோமம், அன்னதானம் ஆகியன நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.