விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2014 04:07
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகம் மற்றும் ஆடிப்பூர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நேற்று விருத்தாம்பிகை சன்னதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், விருத்தாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின்னர், கொடிமரத்திற்கு பால், புனிதநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க திருவிழா கொடியேற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தேர் திருவிழாவிழாவில் 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அம்மன் கிளி வாகனத்தில் வீதி உலாவும், நாளை பூதவாகனத்திலும், 24-ந் தேதி நாக வாகனத்தில் என தினமும் இரவு வீதியுலா நடைபெறுகிறது.விழாவில் சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் அம்மன் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், 31-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.