பதிவு செய்த நாள்
26
ஜூலை
2014
11:07
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதையடுத்து அவர்களின் பாதுகாப்பு வசதிக்காக, கோவில் வளாகத்தில் புதிதாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் திரள்வது வழக்கம். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காகவும், ஒரே இடத்தில் அதிகமான பக்தர்கள் கூட்டம் சேருவதை தடுக்கவும், ஏற்கனவே கோவில் வளாகத்தில் 15 காண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது ஆடி அமாவாசையை முன்னிட்டு, பக்தர்களின் கூட்டத்தை கண்காணித்து அதிகபடியான கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் நிகழ்வதை தவிர்க்கவும் கோவில் கருவறையை சுற்றியுள்ள பகுதிகளிலும், உட்பிரகாரத்திலும், வெளிப்புற வளாகத்திலும் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், கோவில் இரு ஆர்ச் மற்றும் முக்கோணம் பகுதிகளிலும் தலா ஒரு கேமராவும் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வால்பாறை டி.எஸ்.பி சக்திவேல் கூறுகையில்,பொள்ளாச்சி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பழைய பேருந்து நிறுத்தம் பகுதியிலும், உடுமலை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் முக்கோணம் பகுதியுடனும் நிறுத்தப்பட்டு திருப்பி விடப்பட உள்ளது. குண்டம் திருவிழா அன்று செய்யப்பட்டது போல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் உதவிக்காக கோவிலின் இரு இடங்களில் அறிவிப்பு மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.