மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறையில் உள்ள பெருமாள் கோவிலின் கோபுரம் ஏதோ காரணத்தால் முழுமையாக கட்டப்படவில்லை. அதனால் அந்த கோபுரம் மொட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டு காலமாக இந்த கோபுரம் அதே நிலையில் உள்ளது.இந்த நிலையில் மொட்டை கோபுரத்தை புதிதாக அமைக்கவும், கோவிலில் மதிலை ஒட்டி உள்ள பிரகாரத்தில் நடைபாதை அமைத்து பிற திருப்பணிகள் செய்யவும் கோவையை சேர்ந்த உபயதாரர்கள் முன் வந்துள்ளனர். அதற்கு ரூ.14 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருப்பணிகளை மேற்கொள்ள தமிழக இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பணிகள் எந்த வித இடையூறும் இல்லாமல் நல்ல முறையில் நடைபெற சுதர்சன ஹோம வேள்வி நடத்தப்பட்டது. கோவிலின் மதிலை ஒட்டி உள்ள பிரகாரத்தின் பின் பக்கத்தில் மார்க்கண்டேய மகரிஷியும், பூமாதேவியும் தவம் செய்த குகையில் இந்த ஹோம வேள்வி நடைபெற்றது.