பதிவு செய்த நாள்
06
ஆக
2014
11:08
உடுமலை : ""நன்மை செய்பவன் எதிரியாக இருந்தாலும் நண்பனாக ஏற்றுக்கொள்வதும், தீயது செய்பவன் நண்பனாக இருந்தாலும் விட்டு விலகுவதுமே, மனித வாழ்வின் உயர்ந்த குணம், என, உடுமலையில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில், அனந்தபத்மநாபாசாரியார் பேசினார்.உடுமலை ராமகிருஷ்ண பஜனை சபா சார்பில், கடந்த 66 ஆண்டுகளாக, ஆடி மாதத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வ.உ.சி., வீதியில் உள்ள ராமய்யர் திருமண மண்டபத்தில், "ஸ்ரீ கரத்தாழ்வார் வைபவம் என்ற தலைப்பில், மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், சொற்பொழி வாளர் அனந்தபத்மநாபாசாரியார் பேசியதாவது: பெருமாளின் கரம், ஆயுதம் இல்லாததையும் ஆயுதமாக மாற்றும் திறன் கொண்டது; நல்லவர்களை காக்கவும், தீயவர்களை அழிக்கும் வல்லமையும் கொண்டது.நன்மை செய்பவன் எதிரியாக இருந்தாலும் நண்பனாக ஏற்றுக்கொள்வதும், தீயது செய்பவன் நண்பனாக இருந்தாலும் விட்டு விலகுவதுமே மனித வாழ்வின் உயர்ந்த குணத்தை வலியுறுத்தவே, பெரு மாள் தன் நண்பனான பேராசை கொண்ட சீமாலிகனுக்கு பாடம் புகட்டினார். பெருமாளின் கரமானது ஆயிரம் சூரியனை முன்நிறுத்தினாலும் அதைவிட வெளிச்சம் தரக்கூடிய சக்தியுடையது. ஒரு நொடியேனும் விட்டு விலகாமல் பெருமாளுடனே இருந்த கரத்தைக்கண்டு ஆண்டாள் பொறாமை கொண்டுள்ளார். அத்தகைய சிறப்புடையது பெருமாளின் கரம். ஆயுதங்களை ஏந்திய கரத்தாழ்வார், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு துன்பம் வரும் வேளையில், அவர்களை காத்து நிற்கவும் செய்கிறார். இவ்வாறு, அவர் பேசினார்.