பதிவு செய்த நாள்
06
ஆக
2014
11:08
செஞ்சி : செஞ்சி அருகே, பல்லவர் கால கொற்றவை புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே, சிங்கவரம் கிராமத்தில் பழமையான குமாரத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகில், தரிசு நிலத்தை பயிர் செய்ய சமன்படுத்தியபோது, புடைப்பு சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதே பகுதியில், சிற்பத்தை நிலை நிறுத்தி, அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.கல்வெட்டு மற்றும் சிற்பங்களை ஆய்வு செய்து வரும், புதுச்சேரி காசியல் கழக நிறுவனர் லெனின், சிற்பத்தை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: சிங்கவரம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புடைப்பு சிற்பம், கொற்றவை சிற்பமாகும். நின்ற நிலையில், இந்த சிற்பத்தில் எட்டு கைகள் உள்ளன. மேல் இரு கைகளில் பிரயோக சக்கரமும், சங்கும் உள்ளது. கீழ் இரு கைகளில், வாள், அடுத்துள்ள கைகளில் வில், அம்பு, இடைப்பட்ட கைகளில் ஒன்றில் மண்டை ஓடும், மற்றொன்று தெளிவாக குறிப்பிடப்படாமலும் உள்ளது. கொற்றவையின் கால் பகுதியில் எருமைத்தலை, பக்கத்திற்கு ஒருவராக அமர்ந்த நிலையில் இரண்டு பக்தர்கள், தலைக்கு மேல் பகுதியில் ஒருபுறம் மான், மறுபுறம் சிங்கம் உள்ளன. சிற்பத்தின் முகம்சிதைந்துள்ளது. கால்களில் சிலம்பும், இடையிலும், மார்பிலும் கச்சும், கழுத்தில் அணிகலன், காதுகளில் தொங்க கரண்ட மகுடத்துடன் சிற்பம் உள்ளது. இது, பல்லவர் காலத்தை சேர்ந்தது.இவ்வாறு, லெனின் கூறினார்.