கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மந்தவெளி முத்துமாரியம்மன் கோவில் ஆடித் தேர் திருவிழா உற்சவம், கடந்த 10 நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை காத்தவராயன் சுவாமி கழகு மரம் ஏறி மீளுதல் நிகழ்ச்சி கொளஞ்சி பாரத பூசாரி குழுவினரால் நடத்தப்பட்டது. நேற்று காலை விஸ்வரூப தரிசனத்திற்கு பின் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவித்தனர். உற்சவ மூர்த்திகளான விநாயகர், முத்துமாரியம்மன், காத்தவராயன், ஆரியமாலா, கருப்பழகி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் எழுந்தருள செய்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரோடும் வீதி வழியாக பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் பலர் உடலில் அலகு குத்திக் கொண்டும், தீ சட்டி ஏந்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., குணசேகர், ஒன்றிய சேர்மன் ராஜசேகர், தாசில்தார் முனுசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் தர்மகர்த்தா நற்குணம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.