பதிவு செய்த நாள்
07
ஆக
2014
05:08
தமிழகத்தில் முனீஸ்வரர், அய்யனார், கருப்பர், பேச்சியம்மன்... என்றெல்லாம் வணங்கப்படும் கிராம தெய்வங்கள் போல, உத்தரகாண்ட் மாநிலத்தில் வணங்கப்படும் கிராம தெய்வங்கள் போல, உத்தரகாண்ட் மாநிலத்தில் வணங்கப்படும் மூர்த்தி மஹாசூ தேவதா. இவருக்குரிய விசேஷமான கோயில் அமைந்துள்ள இடம் டேராடூன் தாலுகாவில் உள்ள ஹனோல் என்னும் கிராமம். உத்தரகாண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களான, உத்தரகாசி, தேஷ்ரி, சஹரன்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களின் வழிபாட்டு தெய்வம் இந்த மஹாசூ தேவதா. துவாரபர யுக முடிவில் கிருஷ்ணரின் அவதார நோக்கம் நிறைவேறியபடியால் திரும்பவும் வைகுண்டத்துக்குச் சென்றார். அப்போது பாண்டவர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். ஹனோல் பகுதிக்கு அவர்கள் வரும் போது தருமபுத்திரருக்கு அந்த இடம் பிடித்து போக, விஸ்வகர்மாவை அழைத்து அங்கு ஒரு கோயிலை எழுப்புமாறு வேண்டினார். இந்த கோயிலில் பாண்டவர்கள் ஒன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுச் சென்றார்களாம்.
இங்கு வசித்த ஹுனால்பட் என்ற அந்தணரின் பெயரில் இந்த ஊர் பிற்காலத்தில் ஹனோல் என்று அழைக்கப்பட்டதாம். கலியுகம் ஆரம்பித்த சமயத்தில் இந்த இடத்தில் அரக்கர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததாம். அந்த அரக்கர்களில் முக்கியமானவன் கிர்மிர். இவன் ஹுனால் பட் டின் ஏழு பிள்ளைகளையும் விழுங்கிவிட்டான். அவர் மனைவி கிர்த்தகா வை அடைந்துவிட வேண்டும் என்றும் எண்ணினான். இதையறிந்த அந்தப் பெண் சிவபிரானை வேண்டினாள். சிவபிரான் அந்த அரக்கனுடைய கண் பார்வையைப் பறிக்க, அவன் தப்பியோடிவிட்டான். பிறகு அந்த தம்பதியர், அந்த அரக்கனால் மறுபடியும் தமக்குத் தொந்தரவு இல்லாமிலிருக்க வேண்டும் என்று அஷ்டபுஜ துர்க்கையை வேண்டினர். துர்க்கை அவர்களிடம், சிவனை நோக்கித் தவமிருக்கும்படி அறிவுறுத்தினார்கள். அவர்களும் அப்படியே செய்ய, சிவபெருமான் காட்சி தந்து, சீக்கிரமே கெட்டவர்கள் அழிக்கப்படுவர் என்று வரமளித்தார். தவிர தேவியை பூஜை செய்யும்படிப் பணித்தார். அதன்படியே ஹுனால்பட்டும் அவர் மனைவியும் பூஜிக்க, அங்கு தீப்பிழம்பாகத் தோன்றினாள் தேவி. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களது நிலத்தின் ஒரு பகுதியை சுத்த வெள்ளியாலான கலப்பையைக் கொண்டு உழும்படியும், அப்படி உழ உபயோகப்படுத்தும் கலப்பையை இழுக்கும் மாடுகள் இதற்கு முன் உழுவதற்கு உபயோகப்படுத்ததாகவும் இருக்க வேண்டுமென்றும்; ஏழாவது ஞாயிற்றுக்கிழமை மஹாசூ தேவதையும் அவள் சகோதரர்களும் படையுடன் தோன்றி அரக்கர்களை அழிப்பார்கள் என்றும் வரமளித்தாள்.
அம்மாதிரியே ஹுனால் பட்டும் அவர் மனைவியும் ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் செய்துவிட்டார்கள். அவர்கள் உழுத நிலத்திலிருந்து மஹாசூ தேவதையும் அவர் சகோதர்கள் நான்கு பேரும், பல சேனைகளும் மண்ணிலிருந்து தோன்றிய வண்ணம் இருந்தார்கள். முதலில் தோன்றியது பேதா, இரண்டாவதாகத் தோன்றியது பவாசி, மூன்றாவதாகத் தோன்றியது வாசிக், நான்காவதாக தோன்றியது சால்டா. இவர்கள் நால்வரும் மஹாசூ தேவர்கள் என்றே அழைக்கப்பட்டனர். ஐந்தாவது குழியிலிருந்து அவர்களின் தாயார் தேவிலாட்லி தோன்றினாள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து அரக்கர்களை அழித்துவிட்டனர். இந்த மஹாசூ சகோதரர்கள் இல்லாத சமயத்தில் கேசி எனும் அரக்கன் ஹனோல் பகுதியை கைப்பற்றிவிட்டான். மஹாசூ தேவதையும் அவன் படைகளும் கேசி ஒளிந்திருந்த மாஸ்மோர் மலைக்குச் சென்று அவனை வதம் செய்து திரும்பினர்.
பிறகு மஹாசூ சகோதரர்கள் அந்த நாட்டை நான்கு பிரிவாக்கி ஒவ்வொரு பிரிவுக்கும் ஒருவர் என தங்களை தெய்வமாகப் போற்றி வணங்கிய மக்களுக்கு நன்மையைச் செய்தார்கள். இதனால் இப்பகுதி மக்கள் அத்தேவதைகளுக்கு விழா எடுத்து கொண்டாடினர். இந்த விழாவில் அவர்கள் மஹாசூ தேவதைக்கு ஆட்டை பலி கொடுத்து திருப்தி செய்தார்கள். இந்தப் பிரதேசத்தில் மஹாசூ தேவதைகளுக்கான சந்தை ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் மஹாசூ தேவதைகளின் விக்கிரகங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாடுகிறார்கள்.
மஹாசூ தேவதைகளுக்கு தங்கள் குடிமக்கள் தங்கம், வெள்ளி போன்ற விலையுர்ந்த பொருட்களை அன்னியர்களுக்குக் கொடுப்பது பிடிக்காது. குடிமக்கள் பொன், வெள்ளி போன்ற பொருட்களை தாங்கள் வைத்து அனுபவித்தாலும், அவை எல்லாமே மஹாசூ தேவதைகளுக்குத்தான் சொந்தம் என்பதால் இந்தக் கட்டுப்பாடு. இதை மீறுபவர்கள் மஹாசூ தேவதைகளால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். மஹாசூ தேவதை கோயில்கள் அழகான கருங்கல் கட்டடத்தினால் ஆனவை. இந்த கர்ப்பகிருகத்துக்குள் பூசாரியைத்தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த பூஜாரி கூட கடுமையான விரதங்கள் இருந்து, தம்மை தூய்மையான வைத்திருக்க வேண்டும். செல்லும் வழி: டேராடூனிலிருந்து 180 கி.மீ. முசௌரி, புரோலா, நவ்கான் வழியாகச் செல்லலாம். அருகிலுள்ள விமான நிலையம்,நயில் நிலையம்: டேராடூன்.