பதிவு செய்த நாள்
07
ஆக
2014
05:08
எல்லா தெய்வங்களுக்கும் பிரதான கோயில்கள் நாடெங்கிலும் பரவலாக உள்ளன. ஆனால், படைக்கும் கடவுள்- மும்மூர்த்திகளில் ஒருவர்- மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியவர் என பல சிறப்புகள் பெற்ற பிரம்மாவுக்கு மட்டும் ஏன் அவ்வாறு பரவலாக கோயில்கள் இல்லை? ஆறு சமயங்களை வகுத்த ஆதிசங்கரர்கூட பிரம்மாவுக்கென சமயம் வகுக்கவில்லையே, என்ன காரணம்? வஜ்ரநாதன் என்ற அரக்கன் தான் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு பலரை அழித்துவந்தான். குறிப்பாக குழந்தைகளைக் கொல்வதில் குரூர மகிழ்ச்சி கொண்டான். ஒரு கட்டத்தில் கடவுளான பிரம்மாவே அவனை அழிக்க வேண்டிவந்தது. ஒரு தாமரைத் தண்டால் அடிக்க, வஜ்ரநாதன் இறந்தான். அரக்கன் அழிந்த பகுதியில் யாகம் செய்ய எண்ணினார் பிரம்மா. அதற்கான பகுதியில் குண்டங்கள் அமைக்கப்பட்டன. யாகத்திற்கு இடையூறு நேரக்கூடாதென அந்த இடத்தைச் சுற்றிலும் நான்கு மலைகளைத் தோற்றுவித்தார். சிவன், மகாவிஷ்ணு, இந்திரன் மற்றும் பல தேவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.
யாகத்தைத் தொடங்கும் வேளை நெருங்கியது. ஆனால் பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி வந்துசேரவில்லை. மனைவியுடன் யாகத்தைத் தொடங்குவதுதான் முறை. வேறு வழியின்றி பிரம்மா காயத்ரியை மணந்துகொண்டு யாகத்தைத் தொடங்கினார். சற்று தாமதமாக வந்த சரஸ்வதி யாகம் தொடங்கப் பட்டுவிட்டதைக் கண்டு கோபம்கொண்டாள். பார்வதி தேவி, மகாலட்சுமி ஆகியோரை அழைத்து வரச் சென்றதால் சற்று காலதாமதமாகிவிட்டது. அதற்காக என்னைப் புறக்கணித்துவிட்டு யாகத்தைத் தொடங்கியது தவறு. எனவே பிரம்மாவாகிய <உங்களக்கு பூவுலகில் எங்கும் வழிபாடில்லாமல் போகட்டும். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திரன் போரில் தோல்வியடையட்டும். மகாவிஷ்ணு தன் மனைவியைப் பிரியட்டும். சிவனாருக்கு பிச்சையெடுக்கும் சூழ்நிலை அமையட்டும் என்று சபித்தாள்.
அனைவரும் சாபவிமோசனம் கேட்க, அவரவருக்கானதைக் கூறிவிட்டு, பிரம்மாவுக்கு தற்போது யாகம் செய்த இடத்தில் மட்டும் கோவில் அமையுமென்று கூறி, அருகிலிருந்த மலைமீது சென்று அமர்ந்து கொண்டாள். (சிவனின் முடியைக் காணச்சென்ற பிரம்மா பாதியிலேயே திரும்பிவந்து, அதைக் கண்டுவிட்டதாகப் பொய்யுரைத்தபோது, அவருக்கு வழிபாடில்லாமல் போகட்டுமென்று சிவன் சபித்ததாகவும் ஒரு வரலாறுண்டு. மிக <உயரிய நிலையில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை சிறிதளவும் பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இவை சொல்லப்பட்டன. பிரம்மா யாகம் செய்த இடமே தற்போது புஷ்கர் எனப்படுகிறது. தாமரை இதழ்கள் விழுந்த இடம் பிரதான புஷ்கர், மத்திம புஷ்கர், கனிஷ்ட (கடைசி) புஷ்கர் எனப்படுகின்றன. பிரம்மா உருவாக்கிய நான்கு மலைகள் சூரியகிரி (கிழக்கு), சஞ்சோட்டா (மேற்கு), நீலகிரி (வடக்கு),ரத்னகிரி (தெற்கு), எனப்படுகின்றன. சரஸ்வதி சென்றமர்ந்த ரத்னகிரியில், சரஸ்வதிக்கென்று கோவில் உள்ளது.
புஷ்கரில் பிரம்மாவுக்கென்று சிறப்பான கோவில் உள்ளது. கோவிலுக்கு எதிரே மிகப்பெரிய ஏரி உள்ளது. இது மிகச்சிறந்த புனித தீர்த்தமாகக் கருதப்படுகிறது. மானசரோவர் (திபெத்), புஷ்கர், பிந்துசரோவர் (குஜராத்), நாராயணசரோவர் (கட்ச்), பம்பா சரோவர் (கேரளா) ஆகிய ஐந்து புனித நீர்நிலைகளில் இரண்டாமிடம் பெறுகிறது. புஷ்கர் ஏரியில் நிறைய படித்துறைகள் உள்ளன. இதில் பக்தர்கள் சிரத்தையுடன் நீராடுகின்றனர். பிண்டதர்ப்பணமும் செய்யப்படுகிறது. இதனால் மூதாதையர் நற்கதியடைவர் என்று நம்பப்படுகிறது. பிரம்மாவின் கோயில் வெள்ளை பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இடப்புறம் காயத்ரியும், வலப்புறம் சரஸ்வதியும் இருக்க பிரம்மா காட்சி தருகிறார். சிவலிங்கம், பாதாள சிவலிங்கம் என இரு சிவன் சன்னதிகள் உள்ளன. வெள்ளை யானை மேல் அமர்ந்த குபேரன் சிலை, நாரதர் சிலை ஆகியவையும் உள்ளன.
இக்கோயில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகச் சொல்கிறார்கள். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் இங்குவந்து புனருத்தாரணம் செய்தாராம். பின்னர் ஜாவாத்ராஜ் என்னும் மன்னன் திருப்பணி செய்திருக்கிறார். பின்னர் இஸ்லாமிய மன்னன் ஔரங்கசீப் பின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1658- 1707) புஷ்கரிலுள்ள பல கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. அதன்பின் வந்த இந்து அரசர்களும் மற்றவர்களும் தற்போதுள்ள கோயிலை அமைத்துள்ளனர். புஷ்கரில் பிரம்மா கோவில் உட்பட சுமார் 500 கோவில்கள் உள்ளன. இத்தலம் பற்றி பத்மபுராணம் குறிப்பிடுகிறது. வாய்ப்பு கிடைப்பவர்கள் ஒருமுறை புஷ்கர் சென்று தரிசித்துவரலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது புஷ்கர். சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் சென்று, அங்கிருந்து அஜ்மீர் வழியாக புஷ்கர் செல்லலாம்.