பதிவு செய்த நாள்
09
ஆக
2014
02:08
பள்ளிபாளையம்; மழை வேண்டி கிராமத்தில், மாடுகளுக்கு நடந்து திருமண விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
பருவமழை பொய்த்ததால், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சி காணப்படுகிறது. மக்கள் தண்ணீருக்காக மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். அதேபோல், போதிய தண்ணீர் இல்லாததால், பயிர்களும் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி உள்ளனர். மழை வேண்டி கிராமங்களில் மண் சோறு சாப்பிடுவது, கழுதை, தவளைக்கு திருமணம் செய்து வைத்தல், வர்ண பூஜை உள்பட பல்வேறு கோணங்களில் சிறப்பு பூஜையும், வேண்டுதலையும் நடத்தி வருகின்றனர். அவ்வாறு செய்தால், மழை பொழியும் என்பது ஐதீகம். பள்ளிபாளையம் அடுத்த, பாப்பம்பாளையம் எல்லை முனியப்பன் கோவிலில், அப்பகுதி மக்கள் மழை வேண்டி, மாடுகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. அவ்வாறு நடத்தி வைத்தால், ஒரு வாரத்தில் மழை பெய்யும் என்பது ஐதீகம். அதன்படி, நேற்று மதியம், 12 மணிக்கு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு எல்லை முனியப்பன் கோவிலில் குவிந்தனர். அங்கு ஆண் மாட்டுக்கு வேட்டியும், பெண் மாட்டுக்கு சேலையும் அணிவிக்கப்பட்டது. மாடுகளுக்கு மாலை போட்டு, சந்தனம், பொட்டு வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. மேலும், ஹோம குண்டம் அமைத்து சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. திருமண சடங்குகள் முடிந்ததும், பெண் மாட்டுக்கு தாலி கட்டப்பட்டது. திருமணம் முடிந்ததும், அங்கு கூடியிருந்து மக்களுக்கு, விருந்து பரிமாறப்பட்டது. மழை வேண்டி மாட்டுக்கு நடத்தி வைத்த, வினோத திருமண நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.