பதிவு செய்த நாள்
13
ஆக
2014
02:08
சென்னை : நடப்பாண்டில், 106 கோவில்களில், அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும், என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: நெல்லை, திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோவிலின், ஐந்து நிலை ராஜகோபுரத்தில் உள்ள பழமையான ஓவியங்கள், 1.42 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும். கோவில்களில் செயல்படுத்தப்படும் அன்னதான திட்டம், நடப்பு ஆண்டில், 106 கோவில்களில், 3.87 கோடி ரூபாயில் விரிவுபடுத்தப்படும். 1,006 கோவில்களுக்கு, 6 கோடி ரூபாய் செலவில், நடப்பு ஆண்டில், குடமுழுக்கு நடத்தப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள, 1,006 கோவில்களுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்படும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 1,006 கிராம கோவில்களுக்கு, தலா 50,000 ரூபாய் செலவில், திருப்பணி செய்யப்படும். 16 கோவில்களில், 3.46 கோடி ரூபாயில், அன்னதான கூடங்கள் கட்டப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்கள் உட்பட, தமிழகத்தில் உள்ள 10,000 சிறு கோவில்களுக்கு, பூஜை உபகரணங்கள், 2.50 கோடியில் வழங்கப்படும். தொன்மையான, 68 கோவில்கள், அவற்றின் தொன்மை மாறாமல், 22.50 கோடி ரூபாயில் புனரமைக்கப்படும். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில், தலா, 500 பக்தர்கள் தங்கும் வகையில், 50 கோடி ரூபாயில், விடுதிகள் கட்டப்படும். வரும், 2016 பிப்ரவரியில், கும்பகோணத்தில் நடக்கும் மகாமகத்தை முன்னிட்டு, அந்நகரில் உள்ள, 69 கோவில்கள், 12 கோடி ரூபாய் செலவில் செப்பனிடப்படும். இவ்வாறு, அவர் அறிவித்தார்.