பதிவு செய்த நாள்
13
ஆக
2014
02:08
நகரி: பவானி அம்மன் கோவிலில், நேற்று, ஆடிப்பூர உற்சவ விழாவை முன்னிட்டு, பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, சிந்தலப்பட்டடை கிராமத்தில் உள்ள பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், நேற்று, ஆடிப்பூர விழா நடந்தது. விழாவை ஓட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சிந்தலப்பட்டடை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கு சேவையில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், திரவுபதியம்மன் கோவிலில் நடந்த, தீமிதி திருவிழாவை தொடர்ந்து, எட்டாம் நாள் திருவிழாவை ஓட்டி, திரவுபதி சமேத தர்மராஜா சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கிராம வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.