பதிவு செய்த நாள்
16
ஆக
2014
12:08
சபரிமலை: ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கிறது. இன்று முதல் அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரரு நாளை பொறுப்பேற்கிறார். சபரிமலையில் எல்லா தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் இன்று மாலை 5.30-க்கு திறக்கும். இன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். கணபதிஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, உதயாஸ்தமனபூஜை, படிபூஜை, அத்தாழபூஜை, சகஸ்ரகலசம், களபாபிஷேகம் போன்றவை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாதம் கேரளாவில் புதுவருட பிறப்பு என்பதால் அதிகமான பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
புதிய தந்திரி: சபரிமலையில் பூஜைகள் நடத்தும் உரிமை தாழமண் தந்திரி குடும்பத்திடம் உள்ளது. தேவசம்போர்டு சபரிமலை தொடர்பாக எந்த முடிவுகள் எடுத்தாலும் தந்திரியிடம் கேட்ட பின்னர்தான் இறுதி முடிவு எடுக்கின்றனர். தாழமண் குடும்பத்தில் கண்டரரு மகேஸ்வரரு, கண்டரரு ராஜீவரரு ஆகிய இருவர் உள்ளனர். இவர்கள் எல்லா ஆவணி மாதமும் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் சபரிமலையில் பூஜைகளை கவனித்து வருகின்றனர். நாளை ஆவணி ஒன்றாம் தேதி என்பதால் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்கிறார்.
ஏற்பாடுகள்: சபரிமலையில் மண்டல மகரவிளக்கு காலம் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தில், சீசனில் சபரிமலையில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனி கியூ அமைக்கவும், பிரசாத விவியோகத்தை நவீனப்படுத்தி சுலப படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. சபரிமலை செல்லும் எல்லா ரோடுகளையும் விரைவாக சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.