விநாயகரை தினமும் வணங்கலாம் என்றாலும், வெள்ளிக்கிழமையும், சதுர்த்தி திதியும் இணைந்து வரும் நாள் மிகவும் விசஷேமானது. இந்த ஆண்டில், விநாயகர் சதுர்த்தி நன்னாளே வெள்ளிக்கிழமையில் வருவது நாம் செய்த மிகப்பெரிய பாக்கியமாகும். இன்று பகலில், விநாயகரை உபவாசம் (பட்டினி விரதம்) இருப்பது மிகவும் நல்லது. இரவில் விநாயகருக்கு படைத்த பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இன்று விநாயகர் கோயிலில் வலம் வந்து, தலையில் குட்டி, தோப்புக்கரணம் போட்டு வர வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய பிரார்த்தனையைத் தந்துள்ளோம். இந்த பிரார்த்தனையால் உயர்ந்த புகழ் ஏற்படும். நல்ல குழந்தைகள் அமைவார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும். தோஷங்கள் தொலையும்.
* கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! கஜமுக அசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.
* இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருபவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! விநாயகப் பெருமானே! உன்திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.
* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே! சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.
* திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து வை. தூய்மையான மனதைக் கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகிறேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!
* ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவனின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே! சரணம்.. சரணம்... சரணம்!