பதிவு செய்த நாள்
30
ஆக
2014
01:08
ராசிபுரம்: கணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலம் சென்றனர். ராசிபுரம், புதுசத்திரம் அருகே கண்ணூர்பட்டியில், மகா கணபதி மற்றும் மாரியம்மன் கோவில்கள், மிகுந்த பொருட்செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நாளை (ஆக., 31) கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று அதிகாலை கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம், மாலை 4 மணிக்கு காவேரி ஆற்றிலிலிருந்து, புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. புதுசத்திரம் நகரில் இருந்து, திரளான பக்தர்கள் குடங்களில் புனித தீர்த்தம் மற்றும் முளைப்பாரியுடன் கோவிந்தம்பாளையம், பொடங்கம், சின்னாகவுண்டனூர், நாரயாணகவுண்டம்பாளையம் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். அதை தொடர்ந்து மாரியம்மன் ஸ்வாமி யாகசாலைக்கு எழுந்தருளி, முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று, (ஆக., 30) காலை, 6 மணிக்கு வேதபாராயணம், தமிழ் மறை ஓதுதல் நிகழ்ச்சியும், இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5 மணிக்கு, கோபுர கலசம் வைத்தல், கோபுர கண் திறப்பு, யந்திரம் வைத்து அஷ்ட பந்தனம் மருந்து சாத்துதல் மற்றும் ஸ்வாமி பிரதிஷ்டையும் செய்யப்படுகிறது. ஆகஸ்ட், 31ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி நடக்கிறது. தொடர்நது, ராஜ கோபுரங்கள், மகா கணபதி மற்றும் மாரியம்மன் ஸ்வாமி கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.